

அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளக் கூடாது என்று தனக்கு நெருக்கடி கொடுத்து வருவதால், மூர்க்கமடைந்த வட கொரியா தனது பரம எதிரியான தென் கொரிய அதிபரை 'பாலியல் தொழிலாளி' என்றும், அமெரிக்க அதிபர் ஒபாமாவை ‘தரகர்' என்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.
வரலாறு நெடுக வட கொரியாவும் தென் கொரியாவும் பாம்பும் கீரியுமாக சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு செயற்கைக் கோள் படங்கள் மூலமாக, வட கொரியா இன்னொரு அணு ஆயுதச் சோதனைக்குத் தயாராகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, தென் கொரிய அதிபர் பார்க் க்யூன் ஹை மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சர்வதேச விதிகளைக் காட்டி வட கொரியாவை எச்சரித்தனர். மேலும், வட கொரியாவுக்கு உதவும் சீனா அதனுடனான தொடர்பைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தின.
இதைத் தொடர்ந்து தென் கொரியாவுக்கு இரண்டு நாள் பயணமாக ஒபாமா வந்திருந்த போது, ‘வடகொரியா இன்னுமொரு அணு ஆயுதச் சோதனையை நடத்தினால் அது தனித்து விடப்படும்' என்று எச்சரித்ததுடன் அல்லாமல், அந்நாட்டை 'தீண்டத்தகாத நாடு' என்றும் விமர்சித்தார்.
இவற்றால் கோபமடைந்த வட கொரியா, ‘தனக்குப் பிடிக்காதவர்களைச் சிக்க வைக்க, தன்னுடைய உடலை அதிகாரம் மிக்க தரகர் ஒருவரிடம் விற்கும் பாலியல் தொழிலாளியின் நடத்தையைப் போன்று உள்ளது தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிபர்களின் செயல்பாடு' என்று காட்டமாக விமர்சித்துள்ளது.
மேலும், 'பார்க் க்யூன் ஹையும், ஒபாமாவும் தங்களின் எச்சரிக்கைகளால் எங்களின் மனதை மாற்றிவிடலாம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது' என்றும் கூறியுள்ளது.
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியுங் பக்கும் கூட, வட கொரியாவினால் இதுபோன்ற தனிநபர் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தாலும், தற்போது அது நடத்தியுள்ள தாக்குதல் மிக மிகக் கீழ்த்தரமானது என்று கருதப்படுகிறது. காரணம், பார்க் க்யூன் ஹை தான் தென் கொரியாவின் முதல் பெண் அதிபர்.
2013 பிப்ரவரியில் பதவியேற்ற நாள் முதல் பார்க் க்யூன் ஹை வட கொரியாவை தென் கொரியாவுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனினும், வட கொரியா வளைந்து கொடுப்பதாக இல்லை.