மோசடி புகார் தொடர்பாக இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் கைது

மோசடி புகார் தொடர்பாக இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் கைது
Updated on
1 min read

புதிய அதிபர் சிறிசேனா, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பெயர்களை தவறாகப் பயன்படுத்தி மோசடி ஆவணம் ஒன்றை உருவாக்கிய புகாரில் இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் திச அடநாயகே கைது செய்யப்பட்டார்.

இலங்கை நாட்டின் பாதுகாப்பை பின்னுக்குத் தள்ளி தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டதாக, அவர்கள் இருவரும் கையெழுத்திட்டது போன்ற ஒரு ஆவணத்தை திச அடநாயகே தேர்தல் சமயத்தில் உருவாக்கி, சமர்ப்பித்ததற்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் அஜித் ரோஹணா தெரிவித்தார்.

இந்த போலி ஆவணத்தில் உள்ள கையெழுத்து தங்களுடையது இல்லை என்றும் தங்களுடைய கையெழுத்து போலி செய்யப்பட்டுள்ளது என்றும் சிறிசேனா மற்றும் ரணில் விக்ரமசிங்கே புகார் எழுப்பியதையடுத்து முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆவணத்தில், இலங்கை அரசியல் சாசனம் 13-வது சட்டத்திருத்தத்தில் உள்ளவற்றுக்கும் மேலான அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை ராணுவ செலவினங்களை 40% குறைக்கவுள்ளதாகவும், ராஜபக்ச மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளன.

கைது செய்யப்பட்ட அடநாயகே, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்தவர். பிறகு ராஜபக்சவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள எதிர்கட்சி பொறுப்பை உதறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in