

இராக்கில் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த அமைப்பின் வேதிப்பொருள் ஆயுத நிபுணர் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 24ம் தேதி, இராக்கில் உள்ள மொசூல் நகரில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் சலி ஜசீம் அல் சபாவி எனும் ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். இவருக்கு அபு மாலிக் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
இவர் சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தில் விஷவாயு கொடுத்து மக்களைக் கொல்லும் திட்டத்தில் இருந்தவர் ஆவார். அதன் பிறகு 2005-ம் ஆண்டு முதல் அல் காய்தா அமைப்பில் தொடர்பு கொண்டிருந்தார்.
பின்னர் ஐ.எஸ்.அமைப்பில் சேர்ந்த அவர் சமீபகாலமாக அவர்களுக்கு வேதிப்பொருள் கொண்ட ஆயுதங்களைத் தயாரிக்க உதவி வந்ததாகக் கூறப்படுகிறது.
"இவரின் இழப்பால், ஐ.எஸ்.அமைப்பின் ஆயுதத் தயாரிப்பு நடவடிக்கைகள் முடங்கும்" என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.