Published : 25 Feb 2015 10:12 AM
Last Updated : 25 Feb 2015 10:12 AM

உலக மசாலா: பெண்ணின் பெயர் ஏபிசி

கொலம்பியாவைச் சேர்ந்த லேடிஸுங்கா சைபோர்க் என்ற பெண் தன் பெயரை 26 ஆங்கில எழுத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவரது முதல் பெயர் Abcdefg Hijkalmn கடைசிப் பெயர் Opqrst Uvwxyz. மிகப் பெரிய பெயரைக் கூப்பிடுவது கஷ்டம் என்பதால், Abc என்று சுருக்கமாக அழைக்கச் சொல்கிறார். 36 வயதான இந்தப் பெண்ணுக்குத் தன்னுடைய பெயரை அடிக்கடி மாற்றிக்கொள்வதுதான் மிகவும் பிடித்த விஷயம். இவர் பெயரைக் கேள்விப்பட்டு, கொலம்பியன் டிவியில் பேட்டி எடுத்தனர்.

`என்னுடைய பெயரில் உலகிலேயே நான் ஒருத்தி மட்டும்தான் இருக்க வேண்டும். அதனால்தான் அடிக்கடி பெயரை மாற்றிக்கொண்டிருந்தேன். இனி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பெயரை யாருக்கும் வைத்திருக்க மாட்டார்கள்’ என்று பெருமிதம் கொள்கிறார் ஏபிசி. சட்டப்பூர்வமாகத் தன் பெயரைப் பதிவு செய்து, அடையாள அட்டைப் பெறுவதற்காக அரசாங்க அலுவலகத்துக்குச் சென்றார் ஏபிசி. இதுவரை பல முறை பெயர்களை மாற்றியபோதெல்லாம் புருவத்தை உயர்த்தியபடி அடையாள அட்டை வழங்கிய அதிகாரிகள், இந்த முறை குழம்பிப் போய்விட்டனர். 26 எழுத்துகள் கொண்ட பெயருக்காக ஒரு வருடம் போராடி, அடையாள அட்டையைப் பெற்றுவிட்டார் ஏபிசி.

ஒரு அடையாளத்துக்குத்தானேம்மா பேரு… அதுக்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?

பிரிட்டனில் வசிக்கும் 11 வயது சிறுமி ரோவன் ஹன்சென், டிசி காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிப்பார். அப்பொழுதுதான் ரோவனுக்கு ஒரு கேள்வி வந்தது. உடனே டிசி காமிக்ஸ் பதிப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினாள். `ஆண் குழந்தைகளைப் போலவே பெண்களாகிய நாங்களும் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிக்கிறோம். சூப்பர் ஹீரோவாக ஏன் நீங்கள் பெண்களைக் கொண்டு வருவதில்லை? இந்த விஷயம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திரைப்படங்களோ, காமிக்ஸ் புத்தகங்களோ ஆண்களையே சூப்பர் ஹீரோவாகக் காட்டுவது கொஞ்சமும் நியாயமில்லை.

உங்கள் காமிக்ஸ் புத்தகங்கள் என்னை மிகவும் கவர்கின்றன. ஆனால் பெண்களையும் சூப்பர் ஹீரோக்களாகக் கொண்டு வந்தால் இன்னும் அதிகம் விரும்புவோம்’ என்று எழுதி அனுப்பினாள். உடனே டிசி காமிக்ஸ் பதிப்பாளரிடம் இருந்து கடிதம் வந்தது. `காமிக்ஸ் புத்தகங்களில் பெண்களைக் ஹீரோவாகக் கொண்டு வருவது கடினமான விஷயம்தான். ஆனாலும் கண்டிப்பாகக் கொண்டு வருவோம்’ என்று பதில் அனுப்பிவிட்டு, ரோவனைப் போல ஒரு பெண் சூப்பர் ஹீரோவையும் படமாக வரைந்து அனுப்பி வைத்திருக்கிறது. சந்தோஷத்தில் இருக்கிறார் ரோவன்.

ஆஹா! குழந்தைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

உலகிலேயே மிக அதிக வயதான ஜோடி சீனாவில் வசிக்கின்றனர். பிங் முஹு 109 வயது. அவருடைய மனைவி ஸாங் ஸின்னியு 108 வயது. இருவரும் கடந்த 90 ஆண்டுகளாகத் தம்பதியராய் வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று 70 பேர் இவர்கள் குடும்பத்தில் இருக்கிறார்கள். ஐந்து தலைமுறைகளைக் கண்ட இந்த ஜோடி, `ஆரோக்கியமான உணவும் எளிமையான வாழ்க்கையும்தான் எங்கள் ஆயுளுக்குக் காரணம்’ என்கிறார்கள். பிங் முஹுவின் உடல்நிலை கொஞ்சம் மோசமடைந்து வருகிறது. ஆனால் அவர் மனைவி ஆரோக்கியமாக இருக்கிறார்.

கிரேட் ஜோடி!

உலக மக்கள் தொகை 2040ம் ஆண்டில் 11 பில்லியனாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தி இருக்காது. அதனால் பூச்சிகளை உணவாக ஏற்றுக்கொள்ளும்படி பரிந்துரைக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. தற்போது 7 பில்லியன் அளவுக்குப் பூச்சிகள் வசிக்கின்றன. மிகவும் விலை குறைந்த, சத்து மிகுந்த உணவாகப் பூச்சிகள் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறது ஐ.நா. லத்தீன் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பூச்சிகளை உணவாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இனி பூச்சிகளுக்கும் ஆபத்தா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x