Last Updated : 04 Feb, 2015 04:13 PM

 

Published : 04 Feb 2015 04:13 PM
Last Updated : 04 Feb 2015 04:13 PM

மக்கள் ஒன்றுபட வேண்டும்: இலங்கை சுதந்திர தின விழாவில் சிறிசேனா பேச்சு

"அரசால் பிளவுபட்டிருக்கும் தனது மக்களை ஒன்றுபடுத்த முடியாமல் போனது. இனி வரும் காலங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று இலங்கையின் சுதந்திர தின விழாவில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்தார்.

இலங்கையின் சுதந்திர தின விழாவில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா பேசும்போது, "புதிய நல்லாட்சி உதயமாகியிருக்கும் இந்த வேளையில் 67-வது சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மக்களின் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் அவசியமானது.

மக்களிடையே சமாதானத்தைப் பலப்படுத்தி வளர்ச்சியை உறுதிபடுத்திக் கொள்வதற்கு சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் அவசியமாகும். நமது நாடு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னும் இங்கு வாழும் மக்கள் பிளவுபட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

உள்நாட்டு போர் முடிந்தும் நமது மக்கள் மனதளவில் ஒன்றுபடாமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை சரிசெய்வது இங்கு உள்ள அரசியல் தலைவர்களின் கடமை. 67 வருடங்களுக்கு முன்னர் நாம் வென்றெடுத்த சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்கு இளைஞர்கள் பங்கு அவசியமானது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாட்டை வளப்படுத்த இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

உள்நாட்டுப் போரில் உயிர்நீத்து மிகப்பெரும் தியாகங்களைச் செய்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பமாக இதனை எடுத்துக்கொள்வோம். இலங்கையின் சுதந்திரத்துக்காக சமூகம், சமுதாயம் மற்றும் கருத்து வேறுபாடைத் தாண்டி போராடிய அனைத்து மக்களையும் நாம் நினைவுகூர வேண்டும்.

ஆனால் இங்கு மக்கள் வேறுபட்டு இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இனிவரும் காலங்களில் மக்கள் அனைவரும் அன்பு செலுத்தி, நாட்டின் நல்லிணக்கத்துக்காக ஒற்றுமையுடன் அனைத்து அம்சங்களில் செயல்பட வேண்டும். சர்வதேச நாடுகளுடன் அணி சேர்ந்து நமது நாடு அனைத்து வகையிலும் முன்னேற வேண்டியது இந்த சமயத்தில் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் பௌதம் மற்றும் மற்ற மதங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் சமூகத் தடைகளைத் கடந்து தேசத்தின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை ஊழல் ஒழித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உண்மையான தலைவர்களாக இருந்து சேவையாற்றுவது அவசியமாகும்" என்றார்.

சுதந்திர தின விழாவின் போது, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, இனியும் இலங்கையில் எந்த இழப்பும் ஏற்படக் கூடாது என்று சமாதான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x