

தீவிரவாதத்துக்கு எதிராக வலைப்பூவில் கருத்துகளை எழுதிய அமெரிக்க வாழ் வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராய் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இது தொடர்பான விசாரணைக்கு உதவுவதாக தெரிவித்தது.
இது குறித்து அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் ஜெனிஃபர் ஸாக்கி கூறும்போது, "அவிஜித் ராய் (42) சிறந்த எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர். அவரை இழந்திருக்கும் அவரது குடும்பத்துக்கு வருத்தத்தை தெரிவிக்கிறோம்.
படுகொலைக்கான காரணம் விளங்காமல் உள்ள நிலையில், அதற்கான விசாரணைக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. அவரது எழுத்தின் மீது ஆத்திரம் கொண்டவர்கள் இந்தப் படுகொலையை நிகழ்த்தி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது" என்றார்.
முன்னதாக வியாழக்கிழமை தாக்காவில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று விடுதிக்கு சென்றுகொண்டிருந்த அவிஜித் ராய் மற்றும் அவரது மனைவி ரஃபீதியாவை சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம நபர்கள் சிலர் தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அவ்ஜித் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த அவிஜித் ராய் பிரபல எழுத்தாளர் ஆவார். தீவிரவாதத்துக்கு எதிராக 'ஃப்ரீ மைண்ட்' (Free Mind) என்ற தலைப்பில் வலைப்பூவில் எழுதி வந்த அவருக்கு இதற்கு முன்பாக பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
'வைரஸ் ஆப் ஃபெயித்' மற்றும் 'ஃப்ரம் வாக்யூம் டூ தி யூனிவெர்ஸ்' உள்ளிட்ட புத்தகங்களையும் இவர் எழுதி உள்ளார்.
கடந்த ஆண்டு ஆன்லைன் புத்தக விற்பனை வலைதளத்திலிருந்து இவரது புத்தகத்தை நீக்க வேண்டும் என்று அடிப்படைவாதியான ஷஃபியூர் ரகுமான் ஃபாராபியிடமிருந்து இவருக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் ராய்க்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக ஷஃபியூர் ரகுமான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.