

மாயமான மலேசிய விமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படையான அறிக்கையாக வெளியிட உள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் மேற்கொண்ட முற்றுகை போராட்டத்தை அடுத்து மலேசிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. இந்த விமானம் தொடர்பாக இதுவரை எந்த நிலையான தகவல்களையும் வெளியிடாத மலேசிய அரசை கண்டித்து அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இன்று காலை பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள், மலேசிய பிரதமர் நிஜாப் ராசக் அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இது குறித்து மலேசிய பிரதமர் நிஜாப் ராசக் கூறுகையில், "ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்பிக்கப்பட உள்ள மாயமான விமானம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரத்தில் பொது மக்களுக்கக வெளியிடப்படும்" என்றார்.
இந்நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அகுஸ்டா என்ற நகரின் கடற்கரையில் நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மூன்று மர்ம பொருட்கள் கடற்கரையில் ஒதுங்கியிருந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
அந்த பொருட்கள் உடைந்த கார் போன்று தெரிந்தாலும், அது மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் விமானத்திற்கும் கடலில் மிதந்த பொருட்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.