Last Updated : 12 Feb, 2015 10:21 AM

 

Published : 12 Feb 2015 10:21 AM
Last Updated : 12 Feb 2015 10:21 AM

நகரத்துக்குள் நாடு - வாடிகன் 4

வாடிகனின் மொத்தப் பரப் பளவில் கிட்டத்தட்ட சரிபாதி அதன் தோட்டங் கள்தான். நீருற்றுகளும், வரிசை யில் அமைந்த சிற்பங்களுமாக இந்த நந்தவனங்களின் அழகே தனி. வாடிகனின் மியூசியங்கள் கலைக்கண் கொண்ட வேற்று மதத்தினரைக்கூட சொக்க வைக்கும்.

இங்குள்ள தூய பீட்டரின் நினைவாலயம் ஒரு கலை பொக்கிஷம். இங்கு ஃபியடா எனப்படும் சிற்பம் காணப்படுகிறது. இது மைக்கேல் ஆஞ்சலோவின் முத்திரைப் படைப்பு. மேரி மாதா தனது மகனை மடியில் வைத்திருக்கும் தோற்றம் ஒரு கலை மேன்மை. அதாவது சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரை சோகம் பொங்க தன் மடியில் சுமந்திருக்கிறார் மேரி மாதா.

இந்தச் சிற்பம் பிரான்ஸ் நாட்டு கார்டினல் ழான் த பில்லெர்ஸ் என்பவரின் நினைவாக செதுக்கப்பட்டது. பின்னர் இது வாடிகனுக்குக் கொண்டு வரப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஒரே சிலையில் மட்டுமே அதை படைத்த மைக்கேல் ஆஞ்சலோவின் கையெழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

பிரான்ஸில் இது போன்ற சம்பவச் சிறப்பு கொண்ட (thematic) சிற்பங்கள் சகஜம் என்றாலும் இத்தாலிக்கு அப்போது இது ரொம்ப புதுசு. இந்தச் சிற்பத்தை அப்போதே இத்தாலியர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.

வாடிகனிலுள்ள ஸிஸ்டைன் பேராலயத்தின் கூரையில் ஆஞ்சலோ வரைந்த ஓவியங்கள் ஈடுஇணையற்றவை. இங்குள்ள ஆதாம் ஏவாள் ஓவியத்தில் ஒரு சுவாரஸ்யம். ஏவாள் உண்ட தடைசெய்யப்பட்ட பழம் ஆப்பிள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையில் மைக்கேல் ஆஞ்சலோ வரைந்த ஓவியம் ஒரு மரத்திலிருந்து ஏவாள் பழத்தைப் பறிப்பதை சித்தரிக்கிறது. ஆனால் அது ஆப்பிள் மரம் அல்ல. அதன் இலைகளின் வடிவத்தைப் பார்த்தால் அது அத்தி மரம் போலத்தான் தோன்றுகிறது. ஆக, ஏவாள் உண்ட தடைசெய்யப்பட்ட படம் அத்திப் பழமா?

மேற்கூரையில் வரையப்பட்ட (எப்படித்தான் கோள வடிவ உட்புறங்களிலெல்லாம் இப்படி யெல்லாம் வரைய முடிந்ததோ!) ‘ஆதாமின் உருவாக்கம்’ (Creation of Adam) என்ற ஓவியம், மோனோ லிசா ஓவியத்துக்கு சமமாகப் போற்றப்படுகிறது. இதில் நீண்ட தாடியும் வெள்ளை உடையும் கொண்ட கடவுளின் கைவிரல், ஆடையற்ற ஆதாமின் கைவிரலை கிட்டத்தட்ட தொட்டுவிடுவதுபோல வரையப்பட்டுள்ளது.

பிரபல கலைஞன் ரபேலின் கைவண்ணங்களும் வாடிகனில் அணிவகுத்து மனதை மயக்கு கின்றன. வாடிகன் அரண்மனை யில் இவரது ஓவியங்களுக் காகவே நான்கு அறைகள் ஒதுக் கப்பட்டுள்ளன. இவரது படைப்பு களும் மைக்கேல் ஆஞ்சலோவின் படைப்புகளும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்துக்கான முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன.

வருடத்திற்கு 60 லட்சம் பேர் வாடிகனுக்கு வருகிறார்கள் என்றால் அவர்களில் போப்பை தரிசிக்க வருபவர்களின் எண் ணிக்கைக்கு சமமாக வாடிகனின் கலை பொக்கிஷங்களை தரிசிக்க வருபவர்களும் இருப்பார்கள்.

ரோமானிய சக்கரவர்த்தியாக விளங்கிய காலிகூலா என்பவர் வாடிகன் குன்றின் கீழே உள்ள தோட்டப் பகுதியை தன் தேரோட்டிகளின் பயிற்சிக் களமாக பயன்படுத்தினார். அதை ஒரு திறந்த வெளி ஸ்டேடியமாகவும் மாற்றினார்.

நீரோ மன்னன் இந்த பகுதியில் தான், தான் கொன்ற கிறிஸ் தவர்களை ஒட்டுமொத்தமாகப் புதைத்தான் என்று கூறுகிறார்கள். இங்கு அவன் 350 டன் எடை கொண்ட சிவப்பு கிரானைட் கல் ஒன்றை பதித்தான். 1586-ல் அது வாடிகனில் உள்ள தூய பீட்டர் சதுக்கத்துக்கு மாற்றப் பட்டது. இப்போது அது ஒரு பிரம்மாண்ட சூரிய கடிகாரமாகவும் பயன்படுகிறது.

இன்று உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ பஸிலிகா (உயரமான தூண்கள் அமைந்த நீண்ட மண்டபத்தை பஸிலிகா என்பார்கள்) வாடிகனிலுள்ள தூய பீட்டர் பஸிலிகாதான். இதில் சந்தேகத்திற்கே இடம் இல்லை என்பதுபோல் உலகின் பிற பஸிலிகாக்களின் நீள அகலங் களையும் இங்கு பொறித்து வைத்திருக்கிறார்கள்.

வாடிகன் அருங்காட்சியகங்கள் தினமும் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை திறக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் விடு முறை. தூய பீட்டர் பஸிலிகாவில் மக்கள் காலை ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

போப்பின் பிரசங்கத்தைக் கேட்கவேண்டுமென்றால் புதன் கிழமையில் செல்ல வேண்டும். பல மொழிகளில் தன் பிரசங் கத்தைச் செய்யும் போப் இறுதி யில் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவார்.

தூய பீட்டர் பஸிலிகாவின் மையத்தில் வாடிகனின் முதலா வது போப் (அதாவது தூய பீட்டர்) புதைக்கப்பட்ட இடம் உள்ளது. அந்தப் பகுதி 96 அடி உயரம் கொண்டது. வெண்கலத் தகடுகளால் அலங்கரிக்கப்பட் டுள்ளது. அங்கு அமர்ந்து ஜபம் செய்யக்கூடிய அதிகாரம் ஒருவருக்குதான் உண்டு. அவர் நிகழ்கால போப் மட்டுமே.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x