Last Updated : 25 Feb, 2015 10:25 AM

 

Published : 25 Feb 2015 10:25 AM
Last Updated : 25 Feb 2015 10:25 AM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா - 7

சவுதி அரேபியாவின் மன்னராக 1982 முதல் 2005 வரை இருந்த பஹத் அப்துல் அஜீஸுக்கு நாசர், சாத் என்று இரண்டு அண்ணன்கள் உண்டு என்றாலும் தகுதியை முன்வைத்து இவரே பட்டத்து இளவரசர் ஆனார். மன்னர் காலீத் இறந்தவுடன் இவர் மன்னர் ஆனார். மன்னர் என்கிற முறையில் இவர் முன்னின்று நடத்திய செயல்களைவிட, இளவரசராக இவர் செய்தவை அதிகம். ஐ.நா. சபையின் ஆதரவாளராக இருந்தார்.

அமெரிக்காவின் தோஸ்த் ஆனார். அரபு நாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய முயற்சி எடுத்துக் கொண்டார் - முக்கியமாக அல்ஜீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையே. குவைத்தை இராக் ஆக்கிரமித்த போது அரபு நாடுகளை இராக்கிற்கு எதிராக திரட்டியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆனால் பிறகு ஈரானுக்கு எதிராக இராக் போரிட்டபோது இராக்கை ஆதரித்தார் மன்னர். காரணம் கடுமையான இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரான ஒரு புரட்சி ஈரானில் எழுந்திருந்தது. ஆட்சியாளர்களும் இதற்குக் கொஞ்சம் செவி சாய்க்கத் தொடங்கி இருந்தனர். அது போன்ற புரட்சி சவுதி அரேபியாவிலும் வந்து விடக்கூடாதே. எனவேதான் ஈரானுக்கு எதிரான நிலையை மேற்கொண்டார் இவர். இவருடைய ஆடம்பரமான வாழ்க்கை குறிப்பிடத்தக்கது. அதில் பல சுவாரசியங்கள்.

மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார் இவர். இவருக்கான கப்பலில் இரண்டு நீச்சல் குளங்களும் ஒரு திரை அரங்கமும் ஒரு மருத்துவமனையும் இருந்தன. அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு உட்பட பல வசதிகளைக் கொண்டதாக இருந்தது. செயின் ஸ்மோக்கராகவும் மிகவும் பருத்த தேகம் கொண்டவராகவும் இருந்த இவருக்கு மூட்டு வலி, நீரிழிவு நோய், பின்னர் பக்கவாதம்என்று பல நோய்கள் வந்து சேர்ந்தன. இருந்தும் தன் முதிர்ந்த வயதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இவர் (இவரும்?) அரசியல் செய்து கொண்டு இருந்தார்.

ஃபார்ச்சூன் இதழ் இவர் 18 பில்லியன் டாலர் சொத்து கொண்டவர் என்றது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் என்றது. ஆறு மகன்கள், நான்கு மகள்கள் என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்த இவர் தன் 84-வது வயதில் இறந்தார். அவர் இறப்பிற்குப் பிறகு பல அரபு நாடுகள் குறிப்பிட்ட நாட்களுக்கு துக்கம் அனுஷ்டித்தன.

அடுத்து, இரு புனித மசூதிகளின் பாதுகாவலராக (அதுதான் சவுதி அரேபியா மன்னர் யாராக இருந்தாலும் அவரது பட்டப் பெயர்) அரியணை ஏறியவர் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ். சவுதி அரேபியாவின் ஆறாவது மன்னர். பல விதங்களில் சவுதி அரேபியாவின் பொருளாதார, சமூக கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் இவரால் உருவானது. பெண்கள் கல்விக்கெனவே இளவரசி நூரா அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.

நீதித்துறையை ஓரளவு சீரமைத்தார் (இதுவே அங்கு அதிர்ச்சியைக் கிளப்பியது). உலகின் முக்கிய மதங்களின் பிரதிநிதிகளுடன் இவர் பேச்சு வார்த்தைகள் நடத்தியதுண்டு. பாலஸ்தீனத்தில் உண்டான அமைதியின்மையைக் குறைக்க பெரும் முயற்சி எடுத்தார். உலக நாடுகளின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட இவர் தீவிரவாதச்செயல்களைப் பல முறை கண்டித்திருக்கிறார். உலகின் பல நாடுகளுக்கு நல்லெண்ண விஜயம் செய்திருக்கிறார். (இந்தியாவிற்குக் கூட 2006-ல் வந்திருக்கிறார்). பலவித அரபுக் குதிரைகளை ஆசையுடன் வளர்த்தார். ரியாத் நகரில் ஒரு பெரும் நூலகத்தை எழுப்பினார்,

படிப்பதில் பெரும் விருப்பம கொண்டவர் இந்த மன்னர்.மன்னர் அப்துல்லாவிற்குப் பிறகு சமீபத்தில் மன்னர் ஆகி இருப்பவர் சல்மான். அவரும் அவரது ஆறு சகோதரர்களும் `சவுதி ஸெவன்’ என்று செல்லமாகக் குறிப்பிடப்படுகிறார்கள். மன்னர் ஆவதற்கு முன் பல வருடங்கள் ரியாத் நகரத்தின் ஆளுநராகப் பணி ஆற்றியிருக்கிறார். அங்குள்ள பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்காகப் பாடுபட்டார். வெளிநாட்டுப் பிச்சைக்காரர்களை உடனடியாக வெளியேற்றினார். உள்நாட்டுப் பிச்சைக்காரர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்த்தார்.

பஹரைனில் அரசுக்கு எதிராக வலுத்த குரல்கள் எழுந்தபோது சல்மான் சவுதி அரேபியாவின் ராணுவத்தை அங்கு அனுப்பி அந்த அரசுக்கு உதவினார். பாதுகாப்பு அமைச்சராக இவர் இருந்தபோது இவர் ராணுவத்துக்காக செலவழித்த தொகை எக்கச்சக்கம். பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய ராணுவ பட்ஜெட்டை சவுதி அரேபியா தாண்டியது அப்போதுதான்.

மன்னர் குடும்பத்தில் (நாலாயிரம் இளவரசர்களைக் கொண்டது) அமைதியை ஏற்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. முதுகில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர். ஒரு முறை பக்க வாதத்தில் தாக்கப்பட்டதில் இன்னமும்கூட இவரது இடது கை சரியாக வேலை செய்ய வில்லை. நினைவை பாதிக்கும் அல்ஸைமர் நோயும் இவருக்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். வயது எண்பது என்றாலும் இவருக்குத்தான் மன்னர் பதவி. அதுதான் சவுதி அரேபியா.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x