

இலங்கையின் உள்நாட்டு செயல்பாடுகள் குறித்து ஐ.நா. தொடர்ந்து கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது என எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணை செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் உள்நாட்டு செயல்பாடுகளை, முக்கியமாக போரில் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்காணிப்பார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் மகிள சமரவீராவுடன் பான் கி மூன் சமீபத்தில் பேசினார். அப்போது இது தொடர்பாக உறுதியாக சில விஷயங்களை அவரிடம் வலியுறுத்தியுள்ளார் என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராஜபட்ச ஆட்சி முடிவுக்கு வந்து புதிய அரசு வந்துள்ள நிலையில் வெளியாகியுள்ள ஐ.நா.வின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு ஐ.நா. மனித உரிமை குழுவின் நடவடிக்கைகளுக்கு சிறப்பாக ஒத்துழைத்து வருகிறது என்றும் ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.