

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய யோகா குரு விக்ரம் சவுத்ரி (69) மீது லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் 6-வது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் மாணவி ஒருவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்தவர் விக்ரம் சவுத்ரி. 1970-களில் அமெரிக்காவில் குடியேறிய அவர் ‘விக்ரம் யோகா’ என்ற பயிற்சி மையத்தை தொடங்கினார்.
அமெரிக்காவில் மட்டும் 330 மையங்களில் அவர் யோகா பயிற்சி அளித்து வருகிறார். உலகளாவிய அளவில் 1650-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரது பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
முன்னாள் அதிபர் நிக்சன், பிரபல பாப் பாடகி மடோனா, ஹாலிவுட் நடிகை டெமி மூர் உள்ளிட்டோர் விக்ரம் சவுத்ரியிடம் யோகா பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2006-ம் ஆண்டில் அவரது பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஒரு பெண் விக்ரம் சவுத்ரி மீது பாலியல் புகார் அளித்தார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் நான்கு பெண்கள் அவர் மீது பாலியல் வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்த வரிசையில் ஜில் லாலர் என்ற பெண் விக்ரம் சவுத்ரிக்கு எதிராக தற்போது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 2010-ம் ஆண்டில் எனது 18 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள விக்ரம் யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அரசின் கல்வி உதவித் தொகை மூலம் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்தினேன்.
பயிற்சி காலத்தின்போது விக்ரம் சவுத்ரி என்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போதே அவருக்கு எதிராக புகார் அளித்திருந்தால் என்னை பயிற்சி மையத்தில் இருந்து வெளியேற்றி இருப்பார்கள்.
பயிற்சி கட்டணம் வீணாகியிருக்கும். யோகா ஆசிரியருக்கான சான்றிதழும் கிடைத்திருக்காது. எனவே எனக்கு நேர்ந்த கொடு மையை வெளியில் சொல்ல முடியவில்லை எனறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை விக்ரம் சவுத்ரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவரது வழக் கறிஞர்கள் கூறியபோது, பணம் பறிக்கும் நோக்கத்தில் வழக்குகள் தொடரப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.