Last Updated : 10 Feb, 2015 11:31 AM

 

Published : 10 Feb 2015 11:31 AM
Last Updated : 10 Feb 2015 11:31 AM

வடிவத்தில் சிறிய வாடிகன்: வாடிகன் 2

‘’ஒழுங்காக ஓர் அமைதி உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் உங்களது அத்தனை பகுதிகளையும் ஆக்கிரமிப்போம்’’ என்றார் மன்னர் விக்டர் இமானுவேல். ரோம் நகரை தனது நாட்டின் தலைநகராக்கிக் கொள்ளவேண்டுமென்பது அவர் தலையாய விருப்பம்.

இதில் விந்தை என்னவென்றால் கிறிஸ்தவ மதத்துக்கு என்று தனி நிலப்பகுதிகள் இருப்பதைவிட இத்தாலியுடன் இணைந்து இருப் பதைத்தான் போப் ஆளுகையில் உள்ள பகுதியில் வாழ்ந்த மக்களில் பலரும்கூட விரும்பினார்கள்.

ஆனால் போப் பிடிவாதமாக இருந்தார். உலகின் அந்தப் பகுதி ஏசுநாதரால் அவருக்கு அளிக் கப்பட்டது என்று முழங்கினார்.

1871-ல் இத்தாலி ஒன்றிணைக் கப்பட்டது. கிறிஸ்தவ நிலப் பகுதிகள் (Papal States) தங்கள் தனித்துவத்தை இழந்தன. போப், வாடிகன் பகுதிக்குள் தன்னை நுழைத்துக் கொண்டார். அங்கிருந்தே தன்னால் முடிந்த பலவிதங்களில் மன்னனை எதிர்த்துக் கொண்டிருந்தார்.

‘இத்தாலிய தேர்தலில் பங்கு கொள்ள வேண்டாம், இத்தாலிய அரசு கொடுக்கும் மானியங் களை ஏற்றுக் கொள்ள வேண் டாம்’ என்றெல்லாம் கத்தோலிக்கர் களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். காலம் கடந்தது.

தொடர்ந்து 58 வருடங்களுக்கு அடுத்தடுத்து வந்த போப்கள் இத்தாலி என்ற புதிய தேசத்தை அங்கீகரிக்க மறுத்து வந்தனர். வாடிகனைத் தாண்டி இத்தாலிய மண்ணில் கால் வைக்க மாட்டோம் என்றுகூட சபதமிட்டனர். கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடம் ஒரு சிறைக் கைதி போல நடத்தப்படுவதில் இத்தாலிய மன்னர்களுக்கும் சிறு சங்கடம் உண்டாகியிருந்தது.

இதற்குள் வாடிகனுக்கு வேறொரு சிறப்பு கிடைத்திருந்தது. ரோமாபுரியின் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட கான்ஸ்டான்ட்டைன் கொஞ்சம் மிதவாதி. தூய பீட்டரின் சாதாரணக் கல்லறையை, சலவைக்கல் மற்றும் விலை உயர்ந்த சிகப்பு வர்ண கற்களைக் கொண்டு மீண்டும் கட்டினான். வாடிகன் மேலும் பிரபலமானது.

ஒருவழியாக 1929-ல் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினுக்கும் அப்போதைய போப்புக்கும் ஓர் உடன்படிக்கை உண்டானது.

இது தொடர்பான பேச்சுவார்த் தைக்கு முதல் நிபந்தனையாக விதிக்கப்பட்டது ‘பாராளுமன்ற கத்தோலிக்க இத்தாலிய பாப்பு லர் கட்சி’ கலைக்கப்பட வேண்டும்’ என்பதுதான். அரசியல் கலந்த கத்தோலிகத்தை போப் பதினோ ராம் பியஸ் விரும்பவில்லை.

மற்றொரு முக்கிய காரணம் அந்தக் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. தவிர அந்தக் கட்சியை அனுமதித்தால் நாளடைவில் சர்ச்சுக்குள் ஜனநாயகம் புகுந்து விடும் என்கிற அச்சம் வேறு. இதன்படி பாப்புலர் கட்சி கலைக்கப்பட்டது.

நிபந்தனை பூர்த்தியானதும் உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி வாடிகன் நகரம் என்பது இத்தாலியால் தனி நாடாக அங்கீகரிக்கப்படும். வாடிகன் போப்பின் வசம் செல்லும். அதே சமயம் இத்தாலியின் தலைநகரம் ரோம் என்பதை போப் ஒப்புக் கொள்ள வேண்டும். வாடிகன் என்ற நாடு பிறந்தது.

இந்த உடன்படிக்கை லாடேரன் உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்தப் பெயர் கொண்ட பிரம்மாண்டமான மாளிகையில்தான் இது கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் 1929 பிப்ரவரி அன்று கையெழுத்திடப் பட்டன.

இது மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று, வாடிகனுக்கு தனி நாடு அந்தஸ்து, இரண்டு, போரால் வாடிகனில் நிகழ்ந்த பாதிப்புகளை சரி செய்ய நிதி உதவி. மூன்றாவது இத்தாலிக்குள் சில உரிமைகளை போப்புக்கு அளிப்பது - அதாவது இத்தாலியின் பொதுக் கல்வியில் சர்ச்சின் தாக்கம் இருக்கலாம்.

ஒருவிதத்தில் முசோலினிக்கு இது வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். மிகக் குறைந்த நிலப்பரப்பை போப்புக்கு அளித்துவிட்டு தன் சர்வாதிகாரத்துக்கு கத்தோலிக்கத் தலைமைப் பீடத்திலிருந்து அங்கீகாரம் பெற்றுவிட்டார். (அதற்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹிட்லரின் ஆட்சியையும் சட்டபூர்வமானது என்று ஏற்றுக் கொண்டது வாடிகன்).

அதற்குப் பிறகு முசோலினியும் போப்பும் ஒருவருக்கொருவர் ரொம்பவுமே ஆதரவாகச் செயல்பட்டனர். எத்தியோப்பியாவை முசோலினி ஆக்கிரமித்தபோதும் போப் மவுனமாக இருந்தார். சொல்லப் போனால் இத்தாலிய சர்ச் முசோலினியின் யுத்த நடவடிக்கைகளை (போப்பின் ஆசீர்வாதத்தோடு) ஆதரித்தது.

இன்றளவும் லாடேரன் உடன்படிக்கைகள் அமலில் உள்ளன. இத்தாலியில் உள்ள ஒரு நகைச்சுவை நடிகை சில வருடங்களுக்குமுன் போப்பின் தன்பாலின மனிதர்களுக்கு எதிரான நிலைப்பாடை நகைச்சுவையாக சித்தரித்தாள். பிறகுதான் அவள் மேற்படி (லாடேரன்) உடன்படிக்கையை மீறியதால் ஐந்து வருடச் சிறை தண்டனைக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதை அறிந்து அதிர்ந்தாள்.

இத்தாலிய சட்ட அமைச்சர் சாதுரியமாக இதை சமாளித்தார். ‘’போப்பின் அளவு கடந்த மன்னிக்கும் பெருந்தன்மையை மனதில் கொண்டு இவளுக்குத் தண்டனை அளிக்காமல் விடுகிறேன்’’ என்றார்.

மேற்படி ஒப்பந்தம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று ஐரோப்பிய நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த உடன்படிக்கை தொடர்பாக இத்தாலியின் அதிபரை நோக்கி ஒரு பிரெஞ்சு இலக்கியவாதி கைநீட்டி கேலி செய்ய, அவரது உரிமையை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x