

அல்-காய்தாவை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததை அடுத்து அதிருப்தியடைந்த ஒசாமா பின் லேடன் அந்த இயக்கத்தின் பெயரை மாற்றிட நினைத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்டோ இது தொடர்பாக கூறும்போது. "ஒசாமா பின் லேடன் அல்-காய்தா இயக்கத்தின் பெயரை இஸ்லாமியர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக மாற்ற முயற்சித்தார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் அல்-காய்தாவை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு ஒசாமாவை அதிருப்திக்குள்ளாக்கியது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா மறைந்திருந்த பதுங்கிடத்தில் இதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தன.
அமெரிக்காவின் அறிவிப்பு அல்-காய்தாவின் ஆள்சேர்ப்புக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. ஒசாமாவின் குறிப்புகள் இதனை தெள்ளத்தெளிவாக தெரிவிப்பதாக இருந்தன. ஆள்சேர்ப்பு நடவடிக்கையை எளிமையானதாக மாற்ற, இஸ்லாமியர்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பெயரைத் தேர்வு செய்ய அவர் முயற்சித்துள்ளார்.
அல்-காய்தா இஸ்லாமிய இயக்கமாக அறியப்படாமல், பயங்கரவாத இயக்கமாக அனைவராலும் அறியப்பட்டது ஒசாமாவின் மிகவும் யோசனைக்குள்ளாக்கியது. இது குறித்த சில குறிப்புகள் எங்களால் கைப்பற்றப்பட்டது. 'நாம் போர் புரிகிறோம். அதில் நாம் வெற்றி பெறுகிறோமோ, இல்லையோ? ஆனால், நமது எதிரிகளின் நடவடிக்கையால் விரக்தியடைந்துள்ளோம்' என்று ஒசாமாவால் எழுதப்பட்டுள்ளது.
ஒசாமாவின் இந்த எண்ணம் நமக்கு நிறைய புரிதல்களை தருகிறது. உலகளவில் பல தீவிரவாத இயக்கங்கள் உள்ளன. அவை சில சமயங்களில் வெற்றியடைந்தும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் தங்களது தீவிரவாத சிந்தனைகளை இஸ்லாமிய மதத்தின் சிந்தனைகளாக திணிக்க முயற்சிக்கின்றனர் என்பதுதான் அது.
அதே சமயம், அமெரிக்காவோடு போரிடுவதை தீவிரவாத இயக்கங்கள் மிகவும் விருப்பத்துடன் செய்கின்றன என்பதும் உண்மை. ஆனால் இதனை நியாயப்படுத்த முடியாது. இது மதப் போர் இல்லை. அமெரிக்காவின் போர் இஸ்லாமியத்துக்கு எதிரானது இல்லை. மேலும், அந்த நபர்கள் இஸ்லாமையும் வெளிப்படுத்தவில்லை. இதனை இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இதனை உறுதிப்படுத்த நமக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன" என்றார்.