Last Updated : 06 Feb, 2015 07:06 PM

 

Published : 06 Feb 2015 07:06 PM
Last Updated : 06 Feb 2015 07:06 PM

திருநங்கைகளின் உரிமைகளை காத்திடுங்கள்: இந்தியாவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் வலியுறுத்தல்

இந்தியாவில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளைக் காத்து அவர்களுக்கு எதிராக நிகழும் பாகுபாடுகளையும் அவமதிப்புகளை உச்ச நீதிமன்றம் குறுக்கிட்டு களைந்திட வேண்டும் என்று பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு ( HRW - Human Rights Watch) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றம், அங்கு சமீப காலமாக அவர்களுக்கு எதிராக நடந்துள்ள பல்வேறு சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நியாயம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநங்கைகள் வாக்களிக்கவும், கல்வி பயிலவும், வேலைவாய்ப்புகளை பெறவும் இந்திய உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

தற்போது அவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் கிடைக்கப்பெறுகின்றதா என்பதனை அதிகாரிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தில் அவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவதும் அவர்களுக்கான வாழ்வாதாரம் மறுக்கப்படுவதும் கவலை அளிப்பதாக உள்ளது. சமூகத்தில் அவர்கள் மற்ற பாலினத்தவர்கள் போல கண்ணியத்துடனும் மற்றும் துன்புறுத்தல் இல்லாமல் வாழ்க்கை நடத்திடவும் வழிவகை செய்திட வேண்டும்.

முக்கியமாக சட்டப் பிரிவு 377-ன்படி, தன்பாலின உறவு தண்டனைக்குரியதாக கருதப்படுகிறது. இவை திருநங்கைகளுக்கு பொருந்துவதாக உள்ள நிலையில், இது போன்ற நிலைப்பாடுகளின்போது போலீஸாரின் துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் முறைகேடான நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்துதல் போன்ற அவமதிப்புகள் அவர்களுக்கு நடக்கிறது. இவை அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக் காத்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் பாலினம் என்ற பிரிவை சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது.

இதன் மூலம் இவர்களுக்கு ஒடுக்கப்பட்டோர் பிரிவில் சேர்த்து உரிய சலுகைகள், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும். தன்பாலின சேர்க்கையாளர்கள், இருபாலின சேர்க்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x