

ஒரு நாட்டுக்குள் நகரம் இருக்குமா? நகரத்துக்குள் நாடு இருக்குமா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் யோசிப்பீர்கள். ஆனால் அப்படியொரு விசித்திரம்தான் வாடிகன்.
இத்தாலியின் தலைநகரம் ரோம். அதற்குள் இருக்கிறது கத்தோலிக்கர்களின் அதிகார பீடமான வாடிகன் என்ற நாடு. அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட இல்லாமல் ஒரு நாடு!
‘வாடிகனின் வரலாறைச் சொல்லுங்கள். ஆனால் அதில் மதம் என்பதே கலந்திருக்கக் கூடாது’ என்று நிபந்தனை போட்டால் வேறொரு நாடு பற்றிதான் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நீரும் செம்புலச் சேறும் கலந்திருப்பதுபோல வாடிகனோடு மதம் கலந்திருக்கிறது.
இப்போது ரோம் என்பது (என்னதான் தலைநகர் என்றாலும்) ஒரு சிறு நகரம். ஆனால் அந்தக் காலத்தில் ரோம சாம்ராஜ்யம் என்பது பரந்து, விரிந்திருந்தது. இந்த சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையில் இருந்ததுதான் பெத்லஹேம். - யேசுநாதர் அவதரித்த இடம்.
ரோம் நகரிலிருந்து வாடிகனுக் குச் செல்வதற்கு ஒரு மிக பிரம் மாண்டமான சுரங்கப் பாதை மற்றும் நுழைவாயில் வழியாகத்தான் நாங்கள் செல்ல நேர்ந்தது. ஆம், ஏதாவதொரு ‘கேட்’ வழியாகத் தான் வாடிகனுக்குள் நுழைய முடியும். இவ்வளவு முக்கியமான நுழைவாயில்களை கண்கவரும் உடைகளோடு காவல் காப்பவர் களுக்கு ஒரு பொதுவான அம்சம் உண்டு.
அவர்கள் அத்தனை பேரும் பூர்வாசிரமத்தில் சுவிட்சர் லாந்து வாசிகள். அதாவது அந்த நாட்டிலிருந்து வந்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட காவலா ளிகளின் பரம்பரைக்குதான் இங்கு காவல் காக்கும் தகுதி.
மற்றபடி வாடிகனுக்கு என்று ராணுவம் கிடையாது. கத்தோலிக் கர்களின் காணிக்கையால் கஜானா நிரம்பி வழிகிறது. தவிர எந்தவித மான வணிகத்தையும் வாடிகன் வைத்துக் கொள்வதில்லை.
தமிழ்நாட்டில் ஏதாவது பிரபல அரசியல் தலைவருக்கு கூடும் கூட்டத்தையே ‘பல்லாயிரக் கணக்கில்’ என்போம். ஆனால் வாடி கனின் மக்கள் தொகை சுமார் ஆயிரம்பேர்தான். (மற்றவர்கள் எல்லாம் வந்து தொழுதோ, வேடிக்கை பார்த்தோ செல்பவர்கள்).
மக்கள் தொகை சுமார் ஆயிரம் என்ற புள்ளிவிவரத்தோடு வேறொரு புள்ளிவிவரத்தையும் இணைத்துப் பார்த்தால் கொஞ்சம் முரணாக இருக்கும். போப்பின் அலுவலகம் என்பது ஒன்றோ டொன்றாக இணைக்கப்பட்ட பல கட்டிடங்களைக் கொண்டது. அங்குள்ள மொத்த அறைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகம். ஐ.நா.சபையில் வாடிகன் ஓர் உறுப்பினர் இல்லை. என்றாலும் அதற்கு அங்கு ’நிரந்தரப் பார்வையாளர்’ அந்தஸ்து உண்டு.
கொஞ்சம் வாடிகன் சரித்திரத் தில் புகுவோமா?
வாடிகனில் பல நூற்றாண்டு களாகவே (ஏசுநாதர் காலத்தி லேயே) கிறிஸ்தவம் காலூன்றி உள்ளது. தூய பீட்டர் - இவருக்கு கத்தோலிக்க மதத்தில் தனி அந்தஸ்து உண்டு. ரோம் நாட்டின் முதல் போப் ஆண்டவர் அவரே. ‘’எனக்குப் பிறகு சர்ச்சை வழி நடத்தும் பொறுப்பு உனக்குதான்’’ என்று யேசுநாதர் அவரிடம் குறிப்பிட்டிருந்தாராம்.
மன்னன் நீரோவைத் தெரியும் இல்லையா என்று கேட்டால் ‘’ஓ, ரோம் பற்றியெரிந்த போது ஃபிடில் வாசித்தவன்தானே?’’ என்பீர்கள். அவனேதான்.
கி.பி. 54 முதல் 68 வரை ரோம ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியாக விளங்கியவன். ஒருபுறம் பிற நாடுகளுடன் நல்லெண்ண நடவடிக்கைகள், வணிகம், பண்பாடு என்றெல்லாம் நல்ல பெயர் வாங்கினான்.
கி.பி. 64-ம் ஆண்டு ரோம் நகரம் ஒரு மாபெரும் தீவிபத்தை சந்தித்தது. இதை Great Fire of Rome என்றே சரித்திரத்தில் குறிப்பிடுகிறார்கள். தனக்கு ஒரு பிரம்மாண்ட அரண்மனையை எழுப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக நீரோவேதான் இப்படி நகருக்குத் தீ வைத்தான் என்றும் கூறப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் என்றால் அவனுக்கு ஆகாது. கிறிஸ்த வர்களை எண்ணெயில் பொரித்து அவர்களின் உடலை எரித்து அந்த வெளிச்சத்தில் படிப்பது அவனது வழக்கம் என்றுகூட ஒரு நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. (அதெல்லாம் அதிகப்படி என்று கூறும் சரித்திர ஆராய்ச்சி யாளர்களும் இருக்கிறார்கள்)
தூய பீட்டர், மன்னன் நீரோவினால் கொல்லப்பட்டான். பீட்டரைக் குறிவைத்து அவன் கொல்லவில்லை. வாடிகன் குன்றிலிருந்த விளையாட்டு ஸ்டேடியம் ஒன்றில் கிறிஸ்தவர் களை கொத்துக் கொத்தாக மேலுலகுக்கு அனுப்பினான் அந்த மன்னன். அவர்களில் தூய பீட்டரும் ஒருவர். அவர் உடலை சிலுவையில் தலைகீழாகத் தொங்க விட்டானாம் அந்த மன்னன். தூய பீட்டர் இறந்த இடத்தில் அவருக்கு ஒரு கல்லறையை எழுப்பினார்கள் அவரது சீடர்கள்.
ரோம் நாட்டு அரசியலும் கிறிஸ்தவ மதமும் இத்தாலியின் சில பகுதிகளின் அதிகாரத்துக்கு மாறி மாறிப் போட்டியிட்டன. (அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் வெகுவாகவே கலந்திருந்தன என்பது வேறு விஷயம்). வெற்றியும், தோல்வியும் இருதரப்புக்கும் மாறி மாறிக் கிடைத்தன.
இப்போது இத்தாலி இருக்கும் பகுதியின் மத்தியிலுள்ள பெரும் பகுதி கி.பி. 755 முதலாகவே வழிவழியாக வந்த போப்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இவற்றை papal states என்று அழைத்தார்கள்.
1860-ல் போப் ஒன்பதாம் பியஸ் இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தபோதுதான் முக்கிய திருப்புமுனை உண்டானது. போப்பின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலானவற்றை மன்னன் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் தனது ராஜ்ஜியத்துடன் இணைத்துக் கொண்டார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது இத்தாலியின் பகுதி ஆனது.
(உலகம் உருளும்)