Published : 28 Feb 2015 09:42 AM
Last Updated : 28 Feb 2015 09:42 AM

உலக மசாலா: விலை உயர்ந்த சாக்லேட்!

உலகிலேயே அதிக விலை கொண்ட சாக்லெட் ஈக்வடாரில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 42 கிராம் சாக்லெட் 16 ஆயிரம் ரூபாய். ஈக்வடாரில் விளையும் உலகத் தரமான கோகோ விதைகளில் இருந்து, கைகளாலேயே இந்த சாக்லெட் தயாரிக்கப்படுகிறது. 81 சதவிகிதம் கோகோ கலந்த இந்த சாக்லெட், 32 வழிமுறைகளில் உருவாக்கப்படுகிறது.

இறுதியில் ஒரே ஒரு மனிதரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, பெட்டியில் அடைக்கப்படுகிறது. சாக்லெட்டின் நடுவே ஒரு கோகோ விதையும் வைக்கப்படுகிறது. இந்த டார்க் சாக்லெட்டில் தங்க இழையோ, வைரமோ பதிக்கப்படவில்லை. ஆனாலும் உருவாக்கும் விதத்தில் விலை மதிப்புள்ள சாக்லெட்டாக மாற்றியிருக்கிறார்கள்.

14 சிறிய தோட்டங்களில் இருந்து கோகோ விதைகள் பெறப்படுகின்றன. நிலத்திலிருந்து மரம், மரத்திலிருந்து விதைகள், விதைகளில் இருந்து சாக்லெட் என்று ஒவ்வொன்றையும் தனிக் கவனம் எடுத்து உருவாக்கியிருக்கிறோம் என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான கார்ல் ஸ்வெய்ஸெர். மிகக் குறைவாகவே இந்த சாக்லெட் தயாரிக்கப்படுகிறது. அதனால் விலையும் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு 574 சாக்லெட் பார்களே தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

என்னதான் சொன்னாலும், இதெல்லாம் ரொம்ப அநியாயம்…

இத்தாலியைச் சேர்ந்த ஆல்பர்டோ ஃப்ரிகோ விநோதமான பழக்கத்தைக் கடந்த 11 ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறார். 36 வயது ஆல்பர்டோ தினமும் வலது கையால் தொடும் பொருளைப் புகைப்படம் எடுத்து வருகிறார். 2040ம் ஆண்டு, அவர் ஓய்வு பெறும் வரை இந்த வழக்கத்தை மேற்கொள்ள இருப்பதாகக் கூறுகிறார்.

இடது கையில் எப்பொழுதும் கேமராவுடன் இருக்கும் ஆல்பர்டோ, என்ன அவசரமாக இருந்தாலும் வலது கையால் ஒரு பொருளைத் தொட்டுவிட்டால், புகைப்படம் எடுக்காமல் அடுத்த வேலையைச் செய்யமாட்டார். ஒரு நாளைக்குக் குறைந்தது 76 பொருட்களைத் தொடுவதால் 76 புகைப்படங்கள் எடுத்துவிடுகிறார். புகைப்படங்களைத் தேதி, மாதம் குறிப்பிட்டு ஆவணப்படுத்துகிறார். தன்னுடைய 60வது வயதில் சுமார் 10 லட்சம் புகைப்படங்களாவது சேர்ந்துவிடும் என்று பெருமிதம் கொள்கிறார் ஆல்பர்டோ.

ஐயோ… இவங்களை எல்லாம் என்ன செய்யலாம்?

அமெரிக்காவில் வசிக்கும் ஜாமி ஜாக்சனுக்கு பூங்கொத்துகளைச் சேகரிப்பது பொழுதுபோக்கு. திருமணங்களில் மணப்பெண் கையில் இருக்கும் பூங்கொத்தை, தூக்கிப் போட்டுப் பிடிப்பது ஒரு சம்பிரதாயம். அப்படித் தூக்கிப் போடும் பூங்கொத்துகளைச் சரியாகப் பிடித்து, தன் வீட்டு அலமாரியில் கொண்டு வந்து சேர்த்து வைக்கிறார் ஜாமி. 37 வயது ஜாமி, 1996ம் ஆண்டிலிருந்து பூங்கொத்துகளைச் சேகரித்து வருகிறார்.

இதுவரை 46 பூங்கொத்துகள் இவரிடம் உள்ளன. 50 பூங்கொத்துகளைச் சேர்ப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்கிறார். இத்தனைப் பூங்கொத்துகளைச் சேகரித்தாலும் ஜாமி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ’நான் செல்லும் திருமணங்களில் எல்லாம் பூங்கொத்து எனக்கே கிடைத்துவிடாது. சில நேரங்களில் வேறு யாராவது எடுத்துச் சென்றுவிடுவார்கள். வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் பூங்கொத்துகளைச் சேகரிப்பதே நோக்கமாகச் செயல்பட்டு வருகிறேன்’ என்ற ஜாமி, தனது சாதனையை கின்னஸில் பதிய வைக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.

விநோதமான மனிதர்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x