Published : 21 Feb 2015 12:11 PM
Last Updated : 21 Feb 2015 12:11 PM

லண்டன் சூதாட்டக்காரர் கொலையில் சிசிடிவி கேமராவால் துப்பு துலங்கியது

சூதாட்டக்காரரை தனது அழகால் மயக்கி கொலை செய்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் பிரிட்டிஷ் போலீஸார் சிசிடிவி கேமரா பதிவு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் மெஹ்மத் ஹசன் (56). கடந்த மார்ச் மாதம் அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

சூதாட்ட பிரியரான மெஹ்மத் ஹசன் கடந்த பிப்ரவரியில் லியோனி கிரான்ஞர் (25) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் ஒரு மாதமாக நெருங்கிப் பழகியுள்ளனர். சூதாட்டத்தில் ஹசன் சம்பாதித்த பெருந்தொகையை அபகரிக்க லியோனி திட்டமிட்டார். கடந்த மார்ச் 23-ம் தேதி ஹசனும் லியோனியும் லண்டனில் உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் மது அருந்தியுள்ளனர். பின்னர் லியோனியை தனது வீட்டுக்கு ஹசன் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கும் ஹசனுக்கு அளவுக்கு அதிகமாக மது வகைகளை லியோனி பரிமாறியுள்ளார். அந்த நேரத்தில் தனது காதலர் ஜாக்சன், நண்பர் சாண்ட்லரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து ஹசனை கட்டிப் போட்டு அடித்துள்ளனர். மூர்க்கத்தனமான தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முதலில் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறினர். இந்நிலையில் கேளிக்கை விடுதியில் ஹசனும் லியோனியும் நெருக்கமாக இருக்கும் சிசிடிவி கேமரா பதிவு போலீஸாருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து லியோனி, ஜாக்சன், சாண்ட்லர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

மூவரும் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சிசிடிவி கேமரா பதிவு வலுவான ஆதாரமாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x