

தைவான் நாட்டு விமானம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
தைவான் நாட்டின் டிரான்ஸ்ஏசியா ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம் நேற்று (புதன்கிழமை) காலை தைபேயில் உள்ள சாங்ஷான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் தீவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் 53 பயணிகளுடன் 5 விமானப் பணியாளர்களும் பயணித்தனர். உள்ளூர் நேரப்படி சுமார் 11 மணி அளவில் அந்த விமானம் பாலம் ஒன்றின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் விமானத்துக்குள் சிக்கியிருந்ததால் அவர்களை வெளிக்கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதுவரை 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உள்ளே சிக்கியுள்ள 12 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதே 'டிரான்ஸ்ஏசியா ஏர்வேஸ்' நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோசமான வானிலையில் சிக்கி விபத்துக்குள்ளானது. அதில் 48 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.