

மலேசியாவில் இருந்து பெங்களூர் செல்லவிருந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
166 பயணிகளுடன், ஞாயிறு இரவு பெங்களூர் புறப்பட்ட மலேசிய விமானம் எம்.எச்-192 தொழில்நுட்ப கோளாறு காரணமாக உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.56 மணியளவில் மீண்டும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. லேண்டிங் கியரில் கோளாறு இருந்த போதும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, விமானி நூர் ஆதம் ஆஸ்மி அப்துல் ரசாக்கை மலேசிய விமான போக்குவரத்து அமைச்சர் வெகுவாக பாரட்டினார்.
மேலும், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பயணிகளை சந்தித்துப் பேசிய அமைச்சர், பயணிகள் சோர்வுடன் காணப்பட்டாலும் விமானியின் சாதுர்யத்தை வெகுவாக பாராட்டியதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறினார்.
சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மலேசிய ஏர்லைன்ஸுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.