Published : 28 Apr 2014 10:08 AM
Last Updated : 28 Apr 2014 10:08 AM

மாற்று முறை தீர்வு மையம் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் கே அக்னிகோத்ரி பேச்சு

மக்கள் நீதிமன்றமும், மாற்று முறை தீர்வு மையமும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் கே அக்னிகோத்ரி பேசும்போது தெரிவித்தார்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை மாலை மாற்று முறை தீர்வு மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணசாமி ராஜாம்பாள் திருமண மண்டபத்தில் விழா நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட நீதிபதி ஆர். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் கே அக்னிகோத்ரி கலந்து கொண்டு மாற்று முறை தீர்வு மைய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சென்னை மாவட்ட நீதிபதியுமான டாக்டர் கே. அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் தலைமை நீதிபதி சதீஷ் கே அக்னிகோத்ரி பேசுகையில் கூறியதாவது:

மாற்றுமுறை தீர்வு மையத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மையம் திறப்பதற்கு முக்கிய காரணம் நீதிபதி தனபாலன், ரவிச்சந்திரபாபுதான். இந்த மாற்றுமுறை தீர்வு மையம் இந்து கலாச்சார அமைப்பு முறையில் உள்ளது.

உரிமையியல் சட்டத்தின்படி, 1999-ம் ஆண்டு மாற்று தீர்வு மைய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 4-வது மாற்று தீர்வு மையம் விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றமும், மாற்றுமுறை தீர்வு மையமும் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும். கலெக்டர், எஸ்.பி ஆகியோர்களும் இதற்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். வழக்கறிஞர்கள் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். நீதிமன்றம் செல்வதற்கு முன்பு செல்ல வேண்டிய இடங்கள் மக்கள் நீதிமன்றமும் மாற்று முறை தீர்வு மையமும். தொழிலாளர்கள் இந்த மையத்தை அணுகி தேவையான உரிமைகளைப் பெற்று பயனடைய வேண்டும் என்று தலைமை நீதிபதி சதீஷ் கே அக்னிகோத்ரி பேசினார்.

முடிவில் முதன்மை குற்றவியல் நீதிபதி எம். வெற்றிச்செல்வி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x