உலக மசாலா: காதலர் இல்லாதவர்களுக்கு புது அப்ளிகேஷன்!

உலக மசாலா: காதலர் இல்லாதவர்களுக்கு புது அப்ளிகேஷன்!
Updated on
1 min read

தென்கொரியாவில் இருக்கும் நேச்சர் கஃபே வாடிக்கையாளர்களைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. அதன் உரிமையாளர் லீ க்வாங் ஹோ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு வெள்ளைக் கம்பளி ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். இன்று நான்கு வெள்ளை ஆடுகள் கடைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றன. தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஆடுகளைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடித்து விடுகிறது.

கடையில் விற்கும் தானியங்களை வாங்கி ஆடுகளுக்குச் சாப்பிடக் கொடுக்கிறார்கள். மற்ற செல்லப் பிராணிகளைப் போலவே ஆடுகளும் மிகவும் அன்பாகப் பழகுகின்றன. உணவுகளைச் சாப்பிடுகின்றன. குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுகின்றன.

‘ஒரு காபியோ, டீயோ சாப்பிடத்தான் இங்கே வருகிறோம். ஆனால் இங்கிருந்து கிளம்பவே மனம் இருக்காது. ஆடுகளுடன் செலவிடும் நேரத்துக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரலாம். மனம் நிறைய சந்தோஷத்துடன் இங்கிருந்து செல்ல முடிகிறது’ என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

அடடா! மனுசங்க சக உயிரினங்களை நேசிக்க ஆரம்பிச்சிட்டாங்க!

காதலர்கள் தினத்தன்று தனக்குக் காதலர் இல்லை என்று ஏங்குபவர்களுக்காக ஒரு புது அப்ளிகேஷனை உருவாக்கியிருக் கிறார்கள் மாத்யு ஹோமன், கைல் டபோர். ‘இன்விசிபிள் பாய்ஃப் ரெண்ட்’ என்ற இந்த அப்ளிகேஷனில் உங்களுக்குப் பிடித்த பெயர், பிடித்த உருவம், குணாம்சம் எல்லாம் பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.

உங்களுடைய தகவல்களையும் அதில் குறிப்பிட வேண்டும். கட்டணம் செலுத்திவிட்டுக் காத்திருந்தால், உங்களுடைய இன்விசிபிள் பாய்ஃப்ரெண்டிடம் இருந்து மெசேஜ் வரும். மெயில் வரும். தொலைபேசியில் உரையாடவும் முடியும். நீங்கள் எப்படி எல்லாம் பாய்ஃப்ரெண்ட் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் இந்த இன்விசிபிள் பாய்ஃப்ரெண்ட் இருப்பார்.

சண்டை, அழுகை, கோபம், உறவு முறிவு என்ற எந்தப் பிரச்சினைகளும் இதில் இருக்காது. சந்தோஷமாக இருக்கலாம். அமெரிக்காவிலும் கனடாவிலும் கிடைக்கக்கூடிய இந்த அப்ளிகேஷனை விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். ஆரம்ப சேவைக்கு ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். இன்விசிபிள் பாய்ஃப்ரெண்ட் நட்பு தொடரவேண்டும் என்றால் மேலும் கட்டணங்களைச் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அதுக்கு ஒரு நிஜ காதலரைக் கண்டுபிடிச்சுடலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in