

மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பிராந்தியத்தில் நேற்று காலை 7:37 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் இந்த ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய மிக வலுவான நிலநடுக்கம் என கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் 2-வது அதிக மக்கள் தொகை கொண்ட தீவான மிண்டனாவோவுக்கு அப்பால் கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் சரங்கனி மாகாணத்தில் உள்ள மாசிம் நகரத்துக்கு தென்மேற்கே சுமார் 32 கி.மீ. தொலைவில், 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பேரிடரில் 32 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் பலரை காணவில்லை.
பிலிப்பைன்ஸில் 7 லட்சத்துக்கும் அதிக மக்கள் வாழும் துறைமுக நகரான ஜெனரல் சாண்டோஸில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இந்நகரில் மட்டும் 12 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. இந்நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகளை உடனடியாக தொடங்குமாறு பேரிடர் மீட்பு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு சுனாமி அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.