

மக்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு தமிழர்கள் போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்று இலங்கை புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் வெளிநாட்டுத் தூதர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: நாட்டு மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். இருப்பினும் எனது அரசு இப்போதுதான் புதிதாக பதவியேற்றுள்ளது. எனவே இந்த லட்சியத்தை நிறைவேற்ற போதிய அவகாசம் தரப்படவேண்டும்.
வலுவான சகோதரத்துவ உணர்வுடன் அனைத்து சமூகத்தினரும் வாழ்வதற்கு சரியான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
ஜனவரி 8-ம்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சிறுபான்மையினரின் நிலங்களை விடுவித்துள்ளோம். இது தமிழர்கள் மத்தியில் காணப்படும் கொந்தளிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இவ்வாறு சிறிசேனா தெரிவித்தார்.
இதனிடையே, நல்லிணக்க நடவடிக்கைகளை எடுப்பதில் புதிய அரசு நிதானம் காட்டுவதாக விடுதலைப்புலிகள் ஆதரவு தமிழர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் சிறிசேனா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஆட்சி நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த சில நாள்களுக்கு முன் சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 30 ஆண்டு கால உள்நாட்டுப்போரின் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்பது அந்த தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை.
உள்நாட்டு அளவிலேயே போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கலாம். ஐநா ஆதரவுடனான சர்வதேச விசாரணைக்கு அவசியம் இல்லை என்கிற சிறிசேனா அரசின் நிலைக்கு தமிழர் அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.