

பயங்கரவாத அமைப்புகள் நிதி திரட்டுவதை தடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்), அல் நஸ்ரா ஃபிரன்ட் (ஏஎன்எப்) மற்றும் அல் காய்தா தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் கள்ளச் சந்தையில் எண்ணெய் விற்பனை செய்வது, பழங்கால அரும்பொருட்களை விற்பது, ஆட்களை கடத்தி பணம் பறிப்பது போன்ற சட்டவிரோத செயல்கள் மூலம் நிதி திரட்டி வருகின்றன.
இந்நிலையில் இதை தடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நேற்று முன்தினம் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம், அதன் 15 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வர்த்தகத் தொடர்பு, குறிப்பாக எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருள்கள் வாங்குவதை இத்தீர்மானம் கண்டிக்கிறது. மேலும் இத்தகைய தொடர்பு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக் கிறது.
பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் முகவர் களுக்கு சொந்தமான சொத்து களை அனைத்து நாடுகளும் முடக்க வேண்டும், பயங்கரவாத அமைப்புகளின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்தை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வாகனப் போக்குவரத்து இருப்பதாகவும், இதன் மூலம் எண்ணெய், உணவு தானியங்கள், கால்நடைகள், இயந்திரங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், சிகெரட்டுகள் போன்ற பல்வேறு பொருட்கள் பண்டமாற்று முறையிலும் பரிமாறிக்கொள்ளப்படுவதாக தீர்மானத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தனது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் கலாச்சார மற்றும் பாரம்ப ரியச் சின்னங்களை அழிப்ப தற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட் டுள்ளது.