

ஆப்கான் தலைநகர் காபூலுக்கு தெற்கே புலி ஆலம் நகரில் காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காவல்துறையினர் 10 பேர் பலியாகினர்.
"தற்கொலைப் படையைச் சேர்ந்த 4 பேர் காவல்துறை தலைமைச் செயலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ஒருவர் வளாகத்தின் வாயிலருகே வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். காவல்துறையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் எப்படியோ காவல்துறையினரின் துப்பாக்கிகளையும் மீறி உணவு அருந்தும் இடத்திற்கு வந்து தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 10 போலீஸ் பலியாயினர். 8 பேர் காயமடைந்தனர்." என்று மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் மொகமது தர்வேஷ் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே தாலிபான்கள் பொறுப்பேற்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிலிருந்த வெளிநாட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்து வந்துள்ளது.