

அமெரிக்காவின் நியு ஜெர்ஸியில் வசிக்கிறார் பில் பிரெஸ்னன். கடந்த 40 ஆண்டுகளில் 10 ஆயிரம் காதல் கடிதங்களைத் தன் மனைவிக்கு எழுதியிருக்கிறார். திருமணம் நடந்த நாள் முதல் தினமும் கடிதம் எழுதி, கொடுத்து வருகிறார்.
74 வயதான இந்த ஜோடியை வெளியுலகுக்குக் கொண்டு வந்திருக்கிறது ஊடகம். 1974-ம் ஆண்டு பில் ஆசிரியராக இருந்தார். அங்கே கிர்ஸ்டென் மாணவியாக வந்தார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். விரைவில் அது திருமணத்தில் முடிந்தது.
ஏதோ ஓர் ஆர்வத்தில் கடிதம் எழுத ஆரம்பித்த பில், பிறகு அதை ஒரு கடமையாகவே மாற்றிக்கொண்டார். ’எங்களுக்குள்ளும் கருத்து வேற்றுமைகள் வரும். ஆனால் ஒருபோதும் அவற்றை நாங்கள் விவாதமாக வைத்துக்கொள்ள மாட்டோம்’ என்கிறார் பில்.
சக்ஸஸ் ஃபார்முலா!
நியூயார்க்கில் வசிக்கும் பெரு நாட்டைச் சேர்ந்த ஆஸ்கருக்கு 7 குழந்தைகள். ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் தீவிர பக்தர் ஆஸ்கர். கிருஷ்ணரின் பெயர்களையே தன் குழந்தைகளுக்குச் சூட்டியிருக்கிறார். வெளியுலகம் மிகவும் மோசமானது என்று அவர் கருதுவதால், குழந்தைகளை வெளியே அனுமதிப்பதில்லை.
14 ஆண்டுகளாகக் குழந்தைகள் நான்கு அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார்கள். வீட்டுக்குள்ளேயே படிப்பு. வீடு பூட்டியே இருப்பதால் யாருக்கும் வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டதில்லை. வீட்டுக்குள் அமர்ந்தபடி விதவிதமான திரைப்படங்களைப் பார்ப்பதுதான் அவர்களின் ஒரே வேலையாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது.
இதுவரை 5 ஆயிரம் திரைப்படங்களை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். உண்மையில் திரைப்படங்கள் மூலமே வெளியுலகை இவர்கள் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒருவன் வீட்டை விட்டுத் தப்பி ஓடிவிட்டான். அவனைத் தேடும்போதுதான் ஆஸ்கர் குழந்தைகளைச் சிறை வைத்திருக்கும் விஷயம் வெளியே தெரிந்திருக்கிறது.
ஆஸ்கர் குடும்பத்தைக் கேள்விப்பட்டு ஒருவர் ஆவணப்படம் எடுத்திருக்கிறார். அப்பொழுதுதான் திரைப்படம் சார்ந்த விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. ஆஸ்கர் மனதை மாற்றி, சகோதர, சகோதரிகளை வெளியுலகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் அந்த ஆவணப்பட இயக்குநர்.
ஐயோ… இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்…
நிறைய பேருக்குத் தங்கள் மூக்கு சரியில்லை என்று தோன்றும். ஆனால் எல்லோராலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது சாத்தியமில்லை. அவர்களுக்காகவே வந்திருக்கிறது ’நோஸ் சீக்ரெட்’. இதற்குள் கறுப்பு பிளாஸ்டிக் குச்சிகள் இருக்கின்றன. எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
வெளியே செல்லும்போது மூக்குக்குள் இந்தக் குச்சிகளைச் செருகிக்கொண்டால் சப்பையான மூக்கு அழகான மூக்காக மாறிவிடும். வீட்டுக்கு வந்த பிறகு குச்சிகளை எடுத்துவிட்டு, நிம்மதியாக இருக்கலாம். தூங்கும்போது, உடற்பயிற்சி செய்யும்போது, நீந்தும் போது மட்டும் இவற்றை அணியக்கூடாது.
மற்றபடி எங்கும் எடுத்துச் செல்லலாம். பயன்படுத்தலாம். ஸ்மால், மீடியம், லார்ஜ் என்று இது கிடைக்கிறது. அவரவர் மூக்குக்கு ஏற்றவாறு வாங்கி அணிந்துகொள்ளலாம்.
வேகமாகத் தும்மினால் வெளியே வந்துடாதா?
மத்தியத் தரைக்கடலில் சிலர் ஸ்கூபா டைவிங் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது தங்க நிற நாணயங்கள் தரையில் கிடந்ததைக் கண்டனர். விளையாட்டு நாணயங்களாக இருக்கும் என்று நினைத்தனர். ஒரு நாணயத்தைச் சோதித்துப் பார்த்தபொழுது, தங்க நாணயம் என்று தெரியவந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுமார் 2 ஆயிரம் நாணயங்கள் கடலிலிருந்து எடுக்கப்பட்டன. புதையல் கிடைத்துள்ளதால் அந்தப் பகுதியில் ஸ்கூபா டைவிங் செய்ய தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தங்க நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
ம்ம்…எந்த மன்னரோட புதையலோ…