

இரண்டாவது ஜப்பானிய பிணைக் கைதி கென்ஜி கோட்டோவை (47) ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்து இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பானை சேர்ந்த ஹருனா யுகாவா கடந்த 2014-ம் ஆண்டில் சிரியாவுக்கு சுற்றுலா சென்றார். அப்போது அவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவரை மீட்க பத்திரிகையாளர் கென்ஜி கோட்டா சிரியாவுக்கு சென்றார். அவரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இருவரையும் மீட்க ஜப்பானிய அரசு திரைமறைவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்பு புதிய வீடியோவை வெளியிட்ட தீவிர வாதிகள், ஹருனா, கென்ஜியை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
அதன்படி கடந்த 25-ம் தேதி ஹருனா யுகானாவின் தலையை துண்டித்து தீவிரவாதிகள் கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கென்ஜி கோட்டாவையும் அதே பாணியில் கொலை செய்து இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கருப்பு உடை அணிந்த தீவிரவாதியின் முன்பு கென்ஜி கோட்டோ மண்டியிட்டு நிற்க, பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பில் அந்த தீவிரவாதி ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘ஐ.எஸ். அமைப்பை யாராலும் வெற்றி பெற முடியாது. எங்களுக்கு எதிராக ஜப்பானும் போரில் களம் இறங்க முடிவு செய்திருப்பது மாபெரும் தவறு, இனிமேல் ஜப்பானியர்களின் தூக்கம் நிரந்தரமாக தொலைந்துவிடும்’ என்று அந்த தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் சூளுரை
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியபோது, ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல் காட்டுமிராண்டித்தனமானது, அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், கோட்டோவின் மரணத்துக்கு ஐ.எஸ். அமைப்பு கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். அவர்களை தப்பவிட மாட்டோம். சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஐ.எஸ். அமைப்பை அழிப்போம் என்று சூளுரைத்துள்ளார்.
ஒபாமா கடும் கண்டனம்
அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்திரிகையாளர் கென்ஜி கோட் டோவை ஐ.எஸ். தீவிர வாதிகள் காட்டுமிராண்டித்தனமாக கொலை
செய்துள்ளனர். அவரது குடும்பத்தி னருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச சமூகத்துடன் ஜப்பான் கைகோத்து செயல் படுகிறது. அந்த நாட்டு மக்களின் மனஉறுதியைப் பாராட்டுகிறேன். ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் ஐ.எஸ். தீவிரவா திகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜோர்டான் பிணைக் கைதி நிலை?
ஜோர்டானை சேர்ந்த விமானி மாஸ் அல்-கஸாஸ்பே அண்மையில் ஐ.எஸ். முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியபோது அவரது விமானத்தை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தி அவரை சிறைபிடித்தனர்.
அவரை விடுதலை செய்ய ஜோர்டான் சிறையில் உள்ள பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்க வேண்டும் என்று ஐ.எஸ். அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
தீவிரவாதிகள் விதித்திருந்த கெடு முடிவடைந்துள்ள நிலையில் ஜோர்டான் விமானி மாஸ் அல்-கஸாஸ்பேயின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது.