

மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூகியின் வீட்டுக் கதவு ஏலம் விடப்பட உள்ளது.
லண்டனில் இருந்து 27 ஆண்டுகளுக்கு முன்பு மியான்மர் திரும்பிய சூகி அங்கு தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார். அங்குதான் அவர் 15 ஆண்டுகளாக வீட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
அந்த காலகட்டங்களில், அவ்வப்போது தன் வீட்டின் முன் உள்ள இரும்பு வாயிற்கதவுக்கு முன் போடப்பட்டிருக்கும் மேஜை மீது ஏறி அரசின் ஊழல், கல்வித் தரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றுவார்.
சூகி விடுதலையான பிறகு அந்த வீடு பழுது பார்க்கப்பட்டது. அப்போது 54, என்று எண் இடப்பட்டுள்ள அந்த வாயிற்கதவு தனியே கிடந்தது. அவற்றை சூகியிடம் இருந்து சில நூறு டாலர்களுக்கு சூ நையூன்ட் என்பவர் விலைக்கு வாங்கினார்.
தற்போது அவற்றை ஏலம் விட இருப்பதாகக் கூறியுள்ள நையூன்ட், அதன் மூலம் வரக்கூடிய தொகை, சூகியின் 'ஜனநாயகத்துக்கான தேசிய அமைப்பு' (என்.எல்.டி.) கட்சிக்கு ஒரு தலைமைக் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.