உக்ரைன் உள்நாட்டுப் போர் விவகாரம்: ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு

உக்ரைன் உள்நாட்டுப் போர் விவகாரம்: ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு
Updated on
1 min read

உக்ரைன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே ஆகியோர் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர்.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படைகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்தப் போரை நிறுத்த ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே ஆகியோர் சில நாள்களுக்கு முன்பு உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென் கோவை சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து இருவரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புகளின்போது உக்ரைன், ரஷ்ய தரப்பு ஏற்றுக் கொள்ளும் வகையில் 12 அம்சங்கள் கொண்ட புதிய சமரச திட்டம் தயார் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியபோது, முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக உள்ளன. எனினும் உக்ரைன் அரசின் செயல்பாட்டை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே கூறியபோது, எங்களது சமரச திட்டம் வெற்றி பெறவில்லை என்றால் மிகப் பெரிய போர் வெடிக்கக்கூடும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பிரான்ஸ், ஜெர்மனி தலைவர்களின் சமரசத்தால் உக்ரைனில் விரைவில் சண்டை நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in