

இலங்கை இறுதி போரில் நடந்த குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை தாமதப்படுத்தி வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வலியுறுத்தலை ஏற்றுக்கொண்ட ஐ.நா. இவ்வாறு தெரிவித்தது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கையின் இறுதிப் போரில் நடந்த போர் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை வரும் மார்ச் மாதம் 28-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் புதிதாக அதிபர் பொறுப்பை ஏற்றிருக்கும் சிறிசேனா தலைமையிலான அரசு, போர் குற்றங்கள் குறித்து விரிவான புதிய விசாரணை நடத்தப்பட உள்ளதால், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கை வெளியிடுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து சர்வதேச நிபுணர் குழு அறிக்கை வெளியிடுவதை ஆறு மாத காலத்துக்கு தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உயர் ஆணையர் சயீத் ரா-அல் ஹுச்சேன் கூறும்போது, "இது மிகவும் கடினமான முடிவுதான். ஆனால் அறிக்கையை தாமதப்படுத்தி வெளியிட வேண்டும் என்ற விவாதக் கருத்து ஏற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு வெளியிடப்போகும் அறிக்கையில் போர்க் குற்றங்கள் குறித்த மேலும் தெளிவான விவரங்கள் கிடைக்கலாம்.
அவை நிபுணர்க் குழு அறிக்கையில் இடம்பெறாத சில விஷயங்களையும் கூறலாம். இதனால் தாமதமாக வெளியாக இருக்கும் அறிக்கை வலுவானதாக இருக்கும் என்று கருதுகிறோம்" என்றார்.
சபையில் சீனா தரப்பில் பேசும்போது, "இலங்கையின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதித்து அவர்களது வேண்டுகோளை ஏற்க வேண்டும்" என்று ஆதரவு தெரிவிக்கப்பட்டது. நாட்டின் உள் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நாட்டின் மக்கள் பேச உரிமை அளிப்பது அவசியம் என்று பாகிஸ்தான் தரப்பிலும் கூறப்பட்டது.
அதே போல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் புதிய அறிக்கையில் துல்லியமான கருத்துக்களும் நிலவரங்களும் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.