

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இந்திய பயணத்தின்போது, பாஜகவை மனதில் வைத்துதான் மத தீவிரவாதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார் என்ற குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முதுநிலை இயக்குநர் (தெற்கு ஆசியா) பில் ரீனர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜகவை மனதில் வைத்து ஒபாமா பேசவில்லை. அவருடைய முழு உரையையையும் கேட்டால் இது விளங்கும். அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பல்வேறு இன மக்கள் வசிக் கின்றனர். அப்படி இருந்த போதி லும், அனைவருக்கும் ஜனநாயக ரீதியில் சமமான உரிமை வழங்கப்படுகிறது என்றுதான் ஒபாமா கூறியிருந்தார்” என்றார்.
கடந்த மாதம் இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுருந்தார் ஒபாமா. தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ம் தேதி டெல்லியில் உள்ள சிரிபோர்ட் கூட்ட அரங்கத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
சுமார் 35 நிமிடங்கள் பேசிய ஒபாமா, நாட்டின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார். இந்து அமைப்புகள் கட்டாய மதமாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசை எச்சரிக்கும் வகையில் ஒபாமா இவ்வாறு கூறினார் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தன.