Last Updated : 20 Feb, 2015 01:26 PM

 

Published : 20 Feb 2015 01:26 PM
Last Updated : 20 Feb 2015 01:26 PM

ஒரு கதைசொல்லியின் கதை

குழந்தைகளோடு பயணம் செய்வதைவிட அற்புதமான விஷயம் வேறு இருக்க முடியாது. அவர்களுடன் பயணம் செய்ய அவர்களுக்குப் பிடித்தவாறு கதைகளைச் சொல்ல வேண்டும். இதைத் தான் செய்துவருகிறார் ‘நாடோடி கதைசொல்லி’ குமார்.

குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்காகப் பயணப்படுவதையே முழு நேரமாகச் செய்துவருவதால் அவர் தனக்குத்தானே ‘நாடோடி கதைசொல்லி’ என்ற பெயரைக் கொடுத்துக் கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாகக் ‘கதை சொல்றோம் வாங்க’ என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருகிறார் குமார்.

இந்தக் ‘கதை சொல்றோம் வாங்க’ அமைப்பு மூலம் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்குக் கதை சொல்லிவருகிறார் குமார்.

கதையின் பயணம்

மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்றாயிரம் குழந்தைகளுக்கு மேல் கதைசொல்லியிருக்கிறார் குமார். தமிழகத்தில் கோவை, விருதுநகர், திருவாரூர், மதுரை போன்ற மாவட்டங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் சென்று அங்கே கதை சொல்லும் நாடகக் குழுக்களை உருவாக்கியிருக்கிறார் இவர்.

“கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களுடன் சேர்ந்து 2007-ல் ‘அறம்’ என்ற அமைப்பை உருவாக்கினோம். புலிக்காட்டில் இருக்கும் செஞ்சி அம்மன் நகர் கிராமத்தின் குழந்தைகளிடம்தான் முதன்முதலில் நண்பர்களுடன் கதைசொல்லத் தொடங்கினேன்.

ஒரு கட்டத்தில், இந்தக் கதை சொல்லலில் அனைவரும் பங்கேற்கும் வகையில் ‘கதை சொல்றோம் வாங்க’ என்ற அமைப்பை உருவாக்கினோம். இந்த அமைப்பில் என்னுடைய நண்பர்கள் பாஸ்கர், நவீன், பிரவீன், சதிஷ், அபிலாஷ், வெங்கட், ஆனந்த், அஸ்வினி, துவாரக் என ஒரு பெரிய கதை சொல்லும் பட்டாளமே இருக்கிறோம்” என்கிறார் குமார்.

பொறியியல் படித்திருக்கும் இவர், கடந்த எட்டு மாதங்களாகக் குழந்தைகளுக்குக் கதைசொல்வதை மட்டுமே முழுமையாகச் செய்துவருகிறார். “யாரோ ஒருவர் சொல்லும் வேலையை ஒரு அறையில் உட்கார்ந்து செய்வது எனக்குப் பிடிக்கவில்லை.

சமூக சேவை செய்யும் அமைப்புகளிலும் முழுநேரமாகச் சிலகாலம் வேலைபார்த்திருக்கிறேன். ஆனால், இந்த நாடோடி கதைசொல்லி வாழ்க்கையில்தான் எனக்குப் பெரும் மனத்திருப்தி கிடைக்கிறது” என்கிறார் 27 வயதாகும் குமார்.

குழந்தைகள் கற்றுத்தரும் பாடம்

குழந்தைகள் பெரிய விஷயங்களைக்கூட மிக எளிமையாக நமக்குப் புரியவைத்துவிடுவார்கள். ஆனால், குழந்தைகளின் உலகம் எப்போதும் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அவர்களுக்கும் கஷ்டங்கள் இருக்கும் என்று சொல்லும் குமார்,

“ஒரு முறை, ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களைச் சந்தித்தேன். அந்த வகுப்பிலேயே இருக்கும் ஒல்லியாக இருக்கும் சிறுவனை அழைத்து யானை கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னேன். கதை முடிந்து வெளியே வரும்போது, அந்த வகுப்பிலேயே பருமனாக இருக்கும் மாணவன் என்னிடம் பேசினான். ‘நீங்கள் என்னைதான் யானையாக நடிப்பதற்கு அழைப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஒருவேளை, அப்படி அழைத்திருந்தாலும் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். வகுப்பில் குண்டாக இருப்பதனால் என்னைக் கிண்டல் செய்வார்கள். ஆனால், அதற்காக நான் யாரிடமும் கோபப்பட்டது கிடையாது. பத்தாம் வகுப்பு வரைதான் இந்தப் பள்ளியில் படிக்கப்போகிறேன். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கின்றன. இந்த இரண்டு ஆண்டுகளில் யாரிடமும் சண்டை போடாமல் நட்பாகவே இருந்துவிட்டுப்போகலாம் இல்லையா?’ என்று கேட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்” என்கிறார்.

இப்படிப் பலவிதமான ஆச்சரியங்களையும், பாடங்களையும் குழந்தைகள் குமாருக்குக் கற்றுத்தந்திருக்கிறார்கள். “குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பதுதான் பெரியவர்கள் செய்யும் தவறு. அவர்களிடம் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. அதைக் கேட்பதற்கு நாம்தான் இன்னும் நம் காதுகளைத் தயார் செய்யவில்லை” என்கிறார் குமார்.

மேலும் தகவல்களுக்கு: >https://www.facebook.com/indiastoryeducation

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x