

அமெரிக்காவில் தாக்குதல் நடத்தவும், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு பொருளுதவி செய்ததாகவும் மத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்த 3 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்துர் ரசூல் ஹசானோவிச் (24), அக்ரோர் சைதக்மிடவ் (19), மற்றும் அப்ரார் ஹபிபோவ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
கஜகஸ்தானைச் சேர்ந்த சைதக்மிடவ் நேற்று, இஸ்தான்புல் செல்ல விமானம் ஏறும் நிலையில் ஜான் கென்னடி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ரசூல் ஹசானோவிச் அமெரிக்காவிலிருந்து இஸ்தான்புல்லுக்கு அடுத்த மாதம் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்தார்.
ஹபிபோவ் என்ற மற்றொரு நபர் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர், இவர் சைதக்மிடவ்வுக்கு ஐ.எஸ்.-இல் சேர உதவி புரிந்தார்.
இதில் அப்துர் ரசூல் ஹசானோவிட் ஜுரபோவ் என்பவர் 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். உத்தரவிட்டால் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் கொல்லத்தயார் என்று உஸ்பெக் மொழி இணையதளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார்.
அதன் பிறகு விசாரணை முடுக்கிவிடப்பட்டு இவர்கள் பின் தொடரப்பட்டனர். இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.