Published : 06 Feb 2015 11:00 AM
Last Updated : 06 Feb 2015 11:00 AM

உலக மசாலா: பாத் ஹவுஸில் பேத்தியை விட்டுச் சென்ற தாத்தா!

சீனாவில் பாத் ஹவுஸ் மிகவும் பிரபலமானது. அங்கே சென்று உடலை மசாஜ் செய்துகொண்டு, பாதங்களைச் சுத்தம் செய்துகொண்டு, சூடான நீரில் குளித்துவிட்டு வரலாம். ஒரு தாத்தா தனது 6 வயது பேத்தி சியாவோவுடன் பாத் ஹவுஸ் சென்றார். அங்கே தங்கி, உடலை மசாஜ் செய்துகொண்டார்.

திடீரென்று பணம் எடுத்துவிட்டு வர மறந்துவிட்டதாகக் கூறி, பேத்தியை பாத் ஹவுஸிலேயே விட்டுவிட்டுச் சென்றார். போனவர் திரும்பி வரவேயில்லை. ஒரு மாதமாக சியாவோ தாத்தாவை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.

சியாவோவுக்குத் தேவையான உணவு, படுக்கை போன்றவற்றை அளித்து, அன்பாகக் கவனித்துக்கொள்கிறார்கள் அங்கே பணிபுரியும் பெண்கள். பகல் முழுவதும் எல்லோரும் வேலையில் பரபரப்பாக இருப்பதால், பொழுது போகாமல் டிவி பார்க்கிறாள். தூங்குகிறாள். பசித்தால் சாப்பிடுகிறாள்.

ஆனாலும் தனிமையும் வீட்டின் பிரிவும் சியாவோவை வெகுவாகவே பாதித்திருக்கிறது.

ஐயோ… என்ன மாதிரியான மனிதர் இவர்…

அமெரிக்காவின் லூயிவில்லைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் கிரஹாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளைப் போலவே அச்சு அசலாக பொம்மைகளைச் செய்து தருகிறார். செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், அவற்றின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். செல்லப்பிராணிகள் நோயுற்றாலோ, இறந்து போனாலோ அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

அவர்களுக்காகவே இந்தப் பொம்மை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்தேன். செல்லப்பிராணிகளின் புகைப்படங்களை அனுப்பி, என்ன அளவில் வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டால் போதும். பொம்மையைத் தயாரித்து அனுப்பிவிடுகிறார் ஜெனிஃபர்.

மீன், பறவை, பல்லி, நாய், பூனை, குதிரை, மாடு, கழுதை போன்று எந்த விலங்கையும் பொம்மையாக உருவாக்கி விடுகிறார். அளவுக்கு ஏற்றவாறு விலைகளை நிர்ணயித்திருக்கிறார். பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. அதற்குள் நிறைய பேர் ஆர்டர் தந்துகொண்டே இருக்கிறார்கள் என்கிறார் ஜெனிஃபர்.

மக்களோட உணர்வுகளைப் புரிஞ்சிக்கிட்டு சரியான பிஸினஸைத்தான் ஆரம்பிச்சிருக்கீங்க!

சீனாவின் நன்டோங் பகுதியில் வாங் என்ற இளைஞர் தன் இடது கையைக் கத்தியால் வெட்டிக்கொண்டார். பெற்றோருக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் வெட்டப்பட்ட கையோடு, சாலையில் அமர்ந்திருந்தார். வெட்டிய கையை மீண்டும் இணைக்க முடிந்தால் கூட பழைய நிலைக்கு கை வராது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சீனாவில் இண்டர்நெட்டுக்கு 2.4 கோடி குழந்தைகள் அடிமையாகி இருக்கிறார்கள். இதனால் பெரும்பாலான வீடுகளில் கட்டுப்பாடுகள் அதிகம் கடைபிடிக்கப்படுகின்றன. மனம் உடைந்த குழந்தைகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு, அதிர்ச்சி அளிக்கின்றனர்.

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷமாகும்…

லாஸ் ஏஞ்சல்ஸில் சிறிய விமானத்தை ஓட்டிச் சென்றார் 29 வயது விமானி. காக்பிட்டில் அமர்ந்தபடி தன்னைத் தானே செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது விமானம் விபத்துக்குள்ளாகி விமானியும் பயணிகளும் இறந்துபோனார்கள்.

விசாரணையில் காக்பிட் வீடியோவில் பதிவான காட்சிகள் பார்க்கப்பட்டன. விமானி செல்ஃபியில் மூழ்கியிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.

சே… செல்ஃபி மோகத்தால் எத்தனை உயிர்கள் பலியாகுது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x