Last Updated : 15 Feb, 2015 12:26 PM

 

Published : 15 Feb 2015 12:26 PM
Last Updated : 15 Feb 2015 12:26 PM

நகரத்துக்குள் ஒரு நாடு - வாடிகன் 6

தற்போதைய போப் 2013-ல் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக ரோம் நகரில் பணியாற்றியதில்லை (பெரும்பாலான முந்தைய போப்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்களாகவும் போப் ஆவதற்கு முன் க்யூரியா என்ற அமைப்பில் பணியாற்றியவர்களாகவுமே இருந்தனர்). வாடிகனில் நிலவும் மெத்தனப் போக்கும், அதிகாரத தந்திரங்களும் போப் பிரான்ஸிஸை கொந்தளிக்கச் செய்துள்ளன.

சமீபத்தில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்பாக கார்டினல்களுடன் உரையாடும்போது வாடிகனிலுள்ள க்யூரியாவின் மெத்தனப் போக்கு குறித்து கவலை தெரிவித்திருக்கிறார் போப். ‘’அவர்களுக்கு ஆன்மிக அல்சைமர் நோய் உருவாகியுள்ளது’’ என்றும் ‘’அங்கே வதந்தி என்கிற தீவிரவாதம் பரவியுள்ளது’’ என்று கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். க்யூரியா என்பது வாடிகனில் இயங்கும் உலக ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் உச்சமான நிர்வாக அமைப்பு.

‘’கடந்த 15 வருடங்களாக இந்த அமைப்பு நோய்வாய்ப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தாண்டிலாவது நாம் அதற்கு உரிய சிகிக்சை அளிக்க வேண்டுமென்று’’ தடாலடியாக அறிவித்திருக்கிறார்.

க்யூரியா தனது 15 நோய்களிலிருந்து விடுபட வேண்டும் என்று போப் வெளிப்படையாகவே அறிவித்தது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆன்மிக அல்ஸைமர் நோய், வதந்திகளில் ஈடுபடும் தீவிரவாதம், தாம் அனைத்திற்கும் மேம்பட்ட அமைப்பு எனும் தலைக்கனம், இரட்டை வேடம், இறுக்கமான நிலை ஆகியவை இந்த நோய்களில் அடக்கமாம்.

அது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக க்யூரியாவின் அதிகாரம் ரோம் பகுதியில் உள்ள பிஷப்களை சுற்றி இருந்து வந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறார் தற்போதைய போப்.

க்யூரியாவில் பதவிக்காக சிலர் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்றும் இதற்காக தங்கள் சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் கவுரவத்தை குழிதோண்டிப் புதைக்கவும் இவர்கள் தயங்குவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இவர்களுக்குள் குழு மனப்பான்மை இல்லை என்றும் ஓர் இசைக்குழுவில் ஆளாளுக்கு தனக்குத் தோன்றிய இசையை வாசித்தால் மொத்தத்தில் உண்டாகும் அபஸ்வரம் போன்ற நிலையைத்தான் தன்னால் காண முடிகிறதென்றும் பளிச்சென்று குறிப்பிட்டிருக்கிறார்.

க்யூரியாவுக்கான மிகப்பெரிய அதிர்ச்சி, போப் அறிவித்துள்ள மற்றொரு மாற்றம். உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க பிஷப்களுக்கு வாடிகன் கொள்கைகள் குறித்து முடிவு செய்ய ஓரளவு அதிகாரம் வழங்கப்படுமாம். அதாவது க்யூரியாவில் அதிகாரம் இனி குறைக்கப்படும் என்பது மறைமுக அர்த்தம்.

ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் சில கார்டினல்களை ஆலோசனை கூறுபவர்களாக அழைத்து வந்து அவர்கள் உதவியுடன் வாடிகன் இயக்கத்தில் புது மலர்ச்சியை கொண்டுவரப் போகிறாராம்.

பொதுவாக திருமண விழாக்களை முக்கியமாக பொது இடங்களில் ஜோடி ஜோடியாக நடத்தப்படும் விழாக்களை - போப் புறக்கணித்துவிடுவார்.

ஆனால் 2014 செப்டம்பர் 14 அன்று வாடிகனிலுள்ள தூய பீட்டர் சதுக்கத்தில் இருபது ஜோடிகளுக்கான திருமணம் போப் தலைமையில் நடந்துள்ளது.

எது போன்றவர்கள் இந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 25 வயதிலிருந்து 56 வயது வரை உள்ளவர்கள். இவர்களில் சிலர் ஏற்கனவே ஒன்றிணைந்து குடும்பம் நடத்தியவர்கள். வேறு சிலர் ஏற்கனவே வேறிடத்தில் திருமணமாகி விவாகரத்து செய்தவர்கள்.

அப்படியானால் இதுபோன்ற போக்குகளை போப் அனுமதிக்கிறாரா? வாடிகனின் பார்வை வெளிப்படையாகவே மாறுபடத் தொடங்கியிருக்கிறதா என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

என்றாலும் தன்பாலின திருமணங்களுக்கு தலைமையேற்க போப் மறுத்திருக்கிறார்.

சென்ற வருடம் போப் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார். ரோம் நகரிலுள்ள ஏழை மக்களுக்கு வாடிகனில் இலவசமாக முகச் சவரமும், முடிவெட்டுதலும் செய்யப்படும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இது நடக்கும். இதற்காக நன்கொடை கேட்கப்பட, நிதியோடு பிளேடுகள், கத்திரிக் கோல்கள், கண்ணாடிகள் என்றும் குவிகின்றனவாம்.

‘’இந்தப் பகுதியில் யாரும் பட்டினியால் இறப்பதில்லை. தினமும் ஒரு சான்விச்சை அவர்களால் கண்டெடுக்க முடியும். ஆனால் மேற்படி சேவைகள் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது’’ என்றார். இதன் இணைப்பாக இலவசக் குளியல் அறைகள் மற்றும் இலவசக் கழிவறை வசதிகளும் அளிக்கப்பட்டன.

ஏழ்மையை அகற்றுவதும் தன் லட்சியம் என்று போப் பிரான்சிஸ் கூறுகிறார். (இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு செய்த ஒரு தில்லுமுல்லும் நினைவு கூரப்படுகிறது. போப் அந்த நாட்டுத் தலைநகரான மணிலாவுக்குச் சென்றிருந்தபோது அந்த நகரிலிருந்த பல நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை தெருக்களிலிருந்து அகற்றி வசதியான இடங்களில் தங்க வைத்தார்களாம் - அதாவது போப் வந்து செல்லும் வரையில்!).

அமெரிக்காவிலுள்ள ஏராளமான கன்னியாஸ்திரீகள் குறித்து வாடிகன் ஓர் ஆராய்ச்சி செய்தது. பெண்ணுரிமை, மதச்சார்பின்மை போன்றவை இவர்களிடம் அதிகம் காணப்படுவது குறித்து வாடிகன் கவலை தெரிவித்திருக்கிறது. வாடிகன் கொடுத்த கேள்வித்தாளை நிரப்புவதற்கு சில அமெரிக்க ‘நன்’கள் மறுத்ததும் வாடிகனை எரிச்சல் கொள்ள வைத்துள்ளது.

‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். வாடிகனின் கொள்கைகளைப் பரப்ப அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வாடிகன் வங்கியின் அதிகாரபூர்வ பெயர் ‘மதப் பணிகளுக்கான நிறுவனம்’ (Institute for the Works of Religion) என்பதாகும். வாடிகன் வங்கியைத் தூய்மையாக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை போப் வெளிப்படுத்தியதோடு அதற்கான செயல்திட்டம் ஒன்றையும் உருவாக்கினார். இதற்கு ஒரு பின்னணி உண்டு. பலவித ஊழல் குற்றச் சாட்டுகள் அதன் மீது கடந்த காலத்தில் சுமத்தப்பட்டன.

பல பரபரப்புச் செய்திகளில் இடம் பெற்ற இந்த அமைப்பை சுத்தம் செய்ய வேண்டும் என்பதிலும் போப் முனைந்திருக்கிறார்.

(அடுத்து சவுதி அரேபியா)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x