வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை கைது செய்ய உத்தரவு

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை கைது செய்ய உத்தரவு
Updated on
1 min read

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் நேற்று கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு, 2 ஊழல் வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, நாட்டில் இருந்து வெளியேறிய அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 7 பேர் மீதான ஜியா அனாதை இல்ல அறக்கட்டளை மற்றும் ஜியா அறக்கட்டளை ஊழல் வழக்குகளை டாக்கா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கலீதா ஜியா நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது என்றும் விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் சிறப்பு நீதிபதி அபு அகமது ஜொமாதர், கலீதாவுக்கு எதிராக நேற்று கைது உத்தரவு பிறப்பித்தார்.

வங்கதேசத்தில் இடைத் தேர்தல் நடத்த வலியுறுத்தி கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

இப்போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, இதுவரை சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கலீதா ஜியாவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in