

வட கொரியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கிம்-இல் ஜாங்குடைய பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
இவரின் பிறந்தநாளையொட்டி, நேற்று முன்தினம் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன், முக்கியமான ராணுவ அதிகாரிகள் சிலருக்குப் பதவி உயர்வு வழங்கியுள்ளார். பின்னர், தனது தந்தை கிம்-இல் ஜாங்குடைய பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குச் சென்று, கின் ஜாங் உன் தன் மரியாதையைச் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தலைநகர் பியாங்யாங்கில் பல்வேறு விதமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே வேளையில், அமெரிக்காவில் உள்ள 'மனித உரிமை கண்காணிப்பகம்' ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'மிகவும் கொடூரமான மற்றும் அடக்குமுறை' ஆட்சியை வழங்கியதற்காகத்தான் கிம்-இல் ஜாங் நினைவு கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வட கொரியாவில் கிம்-இல் ஜாங் மற்றும் அவரது தந்தை கிம்-இல் சுங் ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்கள் அரசு விடுமுறையாகப் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.