Last Updated : 14 Feb, 2015 01:09 PM

 

Published : 14 Feb 2015 01:09 PM
Last Updated : 14 Feb 2015 01:09 PM

நகரத்துக்குள் நாடு - வாடிகன் 5

கிறிஸ்தவ மதம் தோன்று வதற்கு முன்பாகவே வாடிகன் இருக்கிறது. இங்குள்ள ஒரு குன்றை லத்தீன் மொழியில் மோன்ஸ் வாடிகானஸ் என்பார்கள். இதிலிருந்து வந்ததுதான் வாடிகன்.

தூய பீட்டர் சதுக்கத்தையும், இத்தாலியையும் பிரிப்பது ஒரு வெள்ளைக் கோடு மட்டுமே. வாடிகன் வணிகம்கூட செய்யவில்லை என்றால் எங்கிருந்து அதற்கான நிதி கிடைக்கும் என்று கேட்டால் அதற்கான மேலோட்டமான விடை இது. தபால் தலைகள், சுற்றுலாப் பயணிகளுக்கான நிறையப் பொருட்கள், மியூசியங் களுக்கான நுழைவுக் கட்டணம் இவற்றிலிருந்துதான் வருமானம்.

ஆனால் உண்மையான பொருளாதாரம் என்பது கத்தோலிக்க பக்தர்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதிதான். இத்தாலியிலிருந்து வாடிகனுக்குள் நுழைய எந்த பாஸ்போர்ட்டும் தேவையில்லை. தூய பீட்டர்ஸ் சதுக்கம் மற்றும் தேவாலயம் போன்றவைகளுக்கு இலவச அனுமதி. ஆனால் பெரும்பாலான வாடிகன் மியூசியங்களுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. இங்குள்ள நந்தவனங்களுக்குள் பொது வாக பொதுமக்களை அனுமதிப்பதில்லை. மற்றபடி பிற இடங் களுக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு போப்பின் அனுமதி தேவை.

வாடிகனின் நுழைவு வாயில்களைப் பாதுகாக்கும் உரிமை சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிலருக்குத்தான் உண்டு. அவர்கள் அணியும் உடை மிகப் பளிச்சென்று இருக்கும். நெடுக்குவாட்டில் மஞ்சள் மற்றும் நீலப் பட்டைகள் அமைந்த உடை. ஷூக்கள் கறுப்பு நிறம். ஆனால் மிக நீளமான சாக்ஸ்கள் உடையைப் போன்றே மஞ்சள் மற்றும் நீலப்பட்டைகள் கொண்டவை.

1506-லிருந்தே போப்பை பாதுகாக்கும் பொறுப்பு இவர்கள் பரம்பரையினருக்கு வந்து சேர்ந்தது. இப்போதும்கூட, வாடிகனின் பாதுகாவலர்கள் போல இவர்கள் நடந்து கொண்டாலும், சட்டப்படி போப்பை பாதுகாப்பதுதான் இவர்கள் கடமை. 1277-ல் அரை மைல் தூரம் உள்ள சுரங்கப்பாதை ஒன்று வாடிகனையும் இத்தாலியில் உள்ள டைபர் நதிக்கரையில் உள்ள ஒரு பகுதியையும் இணைத்துக் கட்டப்பட்டது. இதன் மூலம் யுத்தங்களின்போது பல போப்கள் உயிர்தப்பி இருக்கிறார்கள்.

ஏற்கெனவே வாடிகனின் மக்கள் தொகை மிகவும் குறைவு. அதிலும் பாதிப் பேர் தூதரகப் பிரதிநிதிகளாக உலகின் பல நாடுகளில் பிரிந்திருக்கிறார்கள். வாடிகன் வானியல் ஆராய்ச்சிகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது. தென்மேற்கு அரிசோனாவில் உள்ள கிரஹாம் குன்றின் மேல் வாடிகனின் மிகவும் நவீனமான தொலை நோக்கி இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கத்தோலிக்க உயர்பீடம் என்கிற கோணத்தில் வாடிகன் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளமானவை.

திருமணம் செய்து கொள்ளவே கூடாது என்பது கத்தோலிக்க பாதிரிமார்களுக்கான முக்கிய விதிகளில் ஒன்று. ஆனால் மற்ற பிரிவினரைப் போல நாங்களும் திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு?’ என்று கேட்கிறார்கள் சில வெளிநாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள். ஏசுநாதரின் முக்கிய சீடர் களிலேயே மணமானவர்கள் உண்டே என்பது இவர்கள் வாதமாக இருக்கிறது.

பாதிரியாக இருந்து கொண்டே ஒழுக்கமீறல்களை செய்து வருபவர்களைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வருவதும் சில வருடங்களாகவே வாடிகனின் தலைமைப் பீடத்தை கவலைப்பட வைத்துள்ளது. இதனால் வாடிகனின் இமேஜ் சரிகிறதே என்ற கவலை.

இங்கிலாந்தில் உள்ள ஆங்லிகன் சர்ச் எனப்படும் கிறிஸ்தவப் பிரிவு, பெண்களும் பாதிரிமார்கள் ஆகலாம் என்று புரட்சிகரமான தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதைச் செயல்படுத்தும் விதமாக முதல் கட்டத்திலேயே நாற்பது பெண்களுக்கு குருத்துவ பட்டம் அளித்தது. இதைத் தொடர்ந்து கத்தோலிக்கப் பிரிவிலும் பெண் பாதிரிமார்களை அனுமதிக்க வேண்டும் என்று பெண்ணுரிமை இயக்கங்கள் சில நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்யத் தொடங்கியிருக்கின்றன. மிகவும் முந்தைய காலகட்டத்தில் கத்தோலிக்கப் பிரிவில் சில பெண்களும் பிஷப்பாக இருந் திருக்கிறார்கள் என்கிறார்கள் இவர்கள்.

கருச்சிதைவை கத்தோலிக்கப் பிரிவு அனுமதிப்பதில்லை. ஆனால் கருச்சிதைவுக்கு ஆதர வான போக்கு பெருகி வருகிறது. ‘‘கருச்சிதைவு கூடாது என்று கூறும் கத்தோலிக்க பிஷப்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வாடிகனுக்கேற்ற மாதிரி போலந்து தலையாட்ட வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. மதத்தைவிட நாட்டுக்குத் தான் இங்கு முதல் இடம்’’ என்று கர்ஜித்தனர் போலந்து நாட்டின் இடதுசாரி கட்சிகள்.

அண்டை நாடுகளுக்குச் சென்று பெண்கள் கருச்சிதைவு செய்து கொண்டு வருவதை (இதை ‘அபார்ஷன் டூரிஸம்’ என்கிறார்கள்) சுட்டிக்காட்டி பெண்களுக்கு கருச்சிதைவு உரிமை தேவை என்றும், இதை வாடிகன் அனுமதிக்க வேண்டுமென்றும், பல பெண்கள் அமைப்புகளும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவில் பிறந்தவர். இவரது சில பேச்சு களும் நடவடிக்கைகளும் மிகவும் அதிரடியாக அமைந் துள்ளன. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x