Published : 26 Feb 2015 09:22 AM
Last Updated : 26 Feb 2015 09:22 AM

உலக மசாலா: சிந்திக்கும் தொப்பி!

அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ‘சிந்திக்கும் தொப்பி’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பெயர் சிந்திக்கும் தொப்பி என்றாலும் இது தானாக சிந்திக்காது. இந்தத் தொப்பியை அணிந்துகொண்டால் வேகமாக எதையும் கற்றுக்கொள்ளவும் விரைவாக முடிவெடுக்கவும் முடியும் என்கிறார்கள்.

ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் திணறுகிறவர்களுக்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் திணறுகிறவர்களுக்கும் தொப்பியை அணிவித்து, குறைந்த அளவு மின்சாரம் மூளைக்குள் செலுத்தினார்கள். அப்பொழுது மிகச் சரியாக முடிவெடுத்துவிட்டனர், வேகமாகக் கற்றுக்கொண்டனர்.

இதுவரை 60 மனிதர்களிடம் இந்தச் சோதனையை நடத்தி, 75 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல சோதனைகளுக்குப் பிறகுதான் இந்தத் தொப்பி வெளிவரும் என்கிறார்கள்.

வேகமா கத்துக்கிற தொப்பின்னா, நம்ம ஊரு குழந்தைகளுக்கு எல்லாம் மாட்டிவிட்டுடுவாங்களே பெத்தவங்க…

நியூயார்க்கைச் சேர்ந்த 15 வயது நோவா மின்ட்ஸ் உலகிலேயே மிக இளம் வயது தொழிலதிபராக இருக்கிறார். ‘நான்னிஸ் பை நோவா’ என்ற அவருடைய குழந்தைகள் காப்பகத்தில் 200 குழந்தைகள் வரை பராமரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் படிக்கும் நோவாவுக்குக் காப்பகத்தில் தீடீரென்று ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்கப் போதுமான அனுபவம் இல்லை.

அதனால் காப்பகத்தை நிர்வகிக்க ஒரு சிஇஓ வை வேலைக்குச் சேர்த்திருக்கிறார். பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களுடன், பிஸினஸ் தொடர்பாக வரும் நூற்றுக்கணக்கான மெயில்களுக்கும் பதில்களை அனுப்புகிறார். சிறிய அளவில் ஆரம்பித்த இந்தத் தொழில், இன்று பெரிதாக வளர்ந்துவிட்டது.

கடந்த ஆண்டில் அவர் முதலீடு செய்த பணத்தை விட மூன்று மடங்கு பணத்தை இந்தத் தொழிலில் ஈட்டிவிட்டார் நோவா. மீடியாவில் நோவாவைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ‘நான் நன்றாகப் படிக்கும் மாணவி இல்லை. ஆனாலும் பிஸினஸில் ஆர்வம் அதிகம். குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்களை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்கிறார் நோவா.

வெல் டன் நோவா!

விதவிதமான உணவுப் பொருட்களை உருவாக்குவதில் ஜப்பானியர்களுக்கு இணை யாருமில்லை. பூண்டு சுவைகொண்ட கோலாவை உருவாக்கியிருந்தார்கள். தற்போது எலுமிச்சையும் ஆரஞ்சும் சேர்ந்த சுவையும் வாசனையும் கொண்ட முட்டைகளை உருவாக்கியிருக்கிறார்கள். எலுமிச்சையும் ஆரஞ்சும் ஜப்பானியர்களின் விருப்பமான பழங்கள். ‘யுஸு டாமா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புளிப்புச் சுவையுடைய முட்டைகளை ஜப்பானியர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முட்டையில் செயற்கை யாக எந்த ரசாயனமும் கலக்கப்படவில்லை.

கோழிகளுக்கு எலுமிச்சை, ஆரஞ்சு இலைகள், தோல்கள் போன்றவற்றைத் தீவனமாகக் கொடுத்து வளர்ப்பதால் முட்டைகளிலும் அந்தச் சுவையும் மணமும் வந்துவிடுகின்றன. சாதாரண முட்டைகளைப் போலவே யுஸு டாமா காட்சியளித்தாலும் மணத்திலும் சுவையிலும் வித்தியாசப்படுகிறது.

சமைக்கும்போதே வாசனை பிரமாதப்படுத்து கிறது. இந்த முட்டை கொஞ்சம் இனிப்புச் சுவையுடனும் இருக்கும் என்பது கூடுதல் விசேஷம்! 6 முட்டைகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை சுமார் 260 ரூபாய்.

தாவரங்களில்தான் கலப்பினம் செஞ்சாங்க… இப்ப முட்டையிலுமா?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x