

அமெரிக்காவின் அலபாமாவில் போலீஸாரால் தாக்கப்பட்ட இந்தியரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அலபாமா நகரின் ஹன்ட்ஸ் வில்லா பகுதியில் அண்மையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சுரேஷ்பாய் படேல் என்ற இந்தியர் மீது அப்பகுதி போலீஸார் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து இந்தியத் தூதரக செய்தித் தொடர்பாளர் ஸ்ரீதரன் மதுசூதனன் கூறியபோது, சுரேஷ்பாய் படேலின் உடல்நிலை இன்னும் கவலையளிப்பதாகவே உள்ளது. இந்த விவகாரத்தை இந்திய அரசு மிக முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனிடையே சுரேஷ் பாயின் சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை ரூ.62 லட்சத்துக்கும் அதிகமாக நிதி குவிந்துள்ளது.
இனவெறி தாக்குதல்
சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியபோது, நிறவெறியின் காரணமாகவே சுரேஷ்பாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். இதனை அப்பகுதி அமெரிக்க அட்டர்னி ஹங்க் ஷெராட்டும் ஒப்புக்கொண் டுள்ளார். அவர் கூறியபோது, சுரேஷ் பாய் நிறத்தின் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன் என்றார்.
எம்.பி.க்கள் கண்டனம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. அமி பெரா கூறியபோது, இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நேரிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்.பி. கிரேஸ் கூறியபோது, இந்தியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இச்சம்பவத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்திய அமெரிக்க சங்கத்தின் தலைவர் சம்பத் கூறியபோது, ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் பிறந்த மண்ணில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். நியூயார்க் அட்டர்னி ரவி பத்ராவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.