Last Updated : 21 Feb, 2015 03:35 PM

 

Published : 21 Feb 2015 03:35 PM
Last Updated : 21 Feb 2015 03:35 PM

மத சார்பின்மை விவகாரம்: பிரதமர் மோடியின் வாக்குறுதிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்பு

இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை அமெரிக்கா அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.

"இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பைப் பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை" என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.

"இந்திய தேசத்தில் நடைபெறும் மதவாத சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடைபிடிக்கும் மவுனம் மிகவும் அபாயகரமானது" என்று விமர்சித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பிப்ரவரி 7- ந் தேதி தனது தலையங்கத்தில் விமர்சித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, டெல்லியில் கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பைப் பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை" எனக் கூறினார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதியை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.

இந்திய குடியரசு தினவிழாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்தார். இந்தப் பயணத்தின்போது சீக்கிய படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் வழிவகை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்த வேண்டும் என்று அந்நாட்டு சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தினர்.

இதற்காக நியூயார்க்கைச் சேர்ந்த 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' ஆன்லைன் மனுவை ஏற்படுத்தி ஆதரவைக் கோரினர். இந்த பெட்டிஷனுக்கு 125,000-க்கும் மேலான அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். சீக்கிய அமைப்பின் மனுவுக்கு அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, "மதச்சார்புகளால் பிரிந்துகிடக்க வாய்ப்பு கொடுக்காத வரையில், இந்தியாவின் வெற்றி நீளும்" எனக் கூறினார்.

தங்களது வலியுறுத்தலுக்கு செவி சாய்த்து அமெரிக்க அதிபர் மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' உறிப்பினர்கள் வெள்ளை மாளிகைக்கு வந்த போது, பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாடினை வரவேற்பதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டது.

இது குறித்து 'நீதிக்கான சீக்கிய அமைப்பு'-இடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறும்போது, "இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளை காத்திடுவதும், அவர்களது சுதந்திரம் மற்றும் உரிமையில் எந்த நடைமுறைச் சிக்கலும் அச்சமும் ஏற்படாமல் இருக்கச் செய்வதே இந்தியாவின் வெற்றியாகும். அதேப் போல கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள் என அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் அமெரிக்கா காத்திடும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x