

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜாகியுர் ரெஹ்மான் லக்வி-க்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடத்தல் வழக்கில் நேற்று ஜாமீன் தர மறுத்துவிட்டது.
லக்வியின் ஜாமீன் மனு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, லக்வி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.
ஜாமீன் மனுவை எதிர்த்து வாதிட்ட அரசு வழக்கறிஞர், “ஆறரை ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முழுமை அடையாத வரை லக்விக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) ரத்துசெய்ய முடியாது” என்றார்.
இதையடுத்து ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், லக்வி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதல் வழக்கில் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இதை ஏற்க மறுக்கிறது.