

ஜமாத் உத் தாவா, ஹக்கானி ஆகிய தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இந்த தடை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மீது அந்நாடு எடுத்துவரும் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்கா வரவேற்றுள்ளது.
லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையதாகவும் அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கருதப்படும் பாகிஸ்தானின் ஜமாத் உத் தாவா மற்றும் ஹக்கானி உள்ளிட்ட சில தீவிரவாத இயக்கங்களை தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவராக உள்ள ஹபீஸ் சயீத் மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் என்பதும் அதேப் போல, பெஷாவார் தாக்குதலின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை திசைத் திருப்பி ஹக்கானி அமைப்பு உதவி புரிந்ததாக கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் இந்தத் தடை நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹர்ஃப், "பாகிஸ்தானின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த இரு இயக்கங்களோடு சேராத இன்னும் 10 இயக்கங்கள் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து முன்னெடுத்து செய்தால், நிச்சயம் அந்நாடு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் வெற்றி காணும்" என்றார்.