Last Updated : 01 Jan, 2015 10:59 AM

 

Published : 01 Jan 2015 10:59 AM
Last Updated : 01 Jan 2015 10:59 AM

அச்சு அசலான கலை

புத்தகத் தயாரிப்பில் மிகவும் முக்கியமானது அச்சுப் பணி. இறுதிக்கட்டப் பணியும் அதுதான். புத்தக வடிவமைப்பு, தட்டச்சுப் பணிகள் என்று அனைத்து விஷயங்களும் முடிந்த பின்னர், அவை அனுப்பப்படுவது அச்சுக்கூடங் களுக்கு. அட்டை, தட்டச்சு செய்யப்பட்ட பிரதிகள் போன்றவற்றின் மின்னணு வடிவங்களைப் பதிப்பகங்கள் அனுப்ப, முழுமையான புத்தகமாக்கித் தருபவை அச்சகங்கள்.

தமிழ்நாட்டில் அச்சுத் துறையில் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டவர் சுதர்சன் கிராபிக்ஸ் அச்சகத்தின் சுப்பிரமணியன். அச்சுத் தொழிலைக் கலையாகக் கருதுபவர். அவருடன் பேசினோம்.

“எல்லா விஷயங்களையும் பதிப்பகங்கள் எங்களுக்கு அனுப்புவாங்க. என்ன மாதிரியான தாள், அட்டையின் தரம் எப்படி இருக்கணுங்கிறது வரை சொல்லிடுவாங்க. அதை அப்படியே செஞ்சிதர்றதுதான் எங்க வேலை” என்று புன்னகைக்கிறார் சுப்பிரமணியன். ஆனால், விஷயம் அத்தனை எளிதானது அல்ல; படப்பிடிப்பு செய்யப்பட்ட அத்தனை காட்சிகளையும் ஒன்றுடன் ஒன்று கோவையாக இணைத்து முழுத் திரைப்படமாக்கும் படத்தொகுப்புக்கு இணை யானது அச்சுப் பணி. புத்தகத்தை முழுமை செய்யும் பணி அது.

“முன்னால எல்லாம் லெட்டர்பிரஸ் தொழில் நுட்பத்துல அச்சுப்பணி செஞ்சாங்க. அதுக்கு நிறைய உழைப்பும் நேரமும் தேவைப்படும். ஆப்செட் தொழில்நுட்பம் வந்தவுடன் வேலை எளிதாயிடுச்சு. கணினியில் டைப் செய்யப்பட்டு வரும் பைல்களைக் கணினியிலிருந்து நெகட்டி வாக மாத்துவோம். அப்புறம் அதை பிளேட்டாக மாத்தி, அச்சுக்கு அனுப்புவோம்” என்கிறார். நெகட்டிவாக மாற்றி அச்சடிப்பதில் சில பிரச்சினைகள் உண்டு. சமயத்தில் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு விதமாக ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அச்சாகிவிடும்.

“டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பின்னால இந்தப் பிரச்சினையெல்லாம் வர்றதில்ல. நாம எதிர்பார்க்குற தரத்தை இப்ப நம்மால குடுக்க முடியும். அச்சுத்தொழிலுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் குடுத்த பெரிய வரம் இது” என்கிறார் சுப்பிரமணியன்.

பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பயின்றிருக்கும் இவர், 1984-ல் அச்சு உலகத்துக்குள் பிரவேசித்தார். அச்சுத் தொழில் தொடர்பான கல்வித் தகுதியுடன் அச்சுத் துறைக்குள் நுழைந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர் இவர். “ஆப்செட் தொழில் அறிமுகமான சமயம் அது. அப்ப நாங்க சந்திச்ச சவால்கள், தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் எல்லாமே எங்களுக்குப் பாடமா இருந்துச்சி” என்கிறார், பல முன்னணிப் பதிப்பகங்களிடையே நற்பெயரைச் சம்பாதித்திருக்கும் சுப்பிரமணியன்.

இந்த ஆண்டு நடக்கும் சென்னை புத்தகக் காட்சிக்கு க்ரியா பதிப்பகம், இந்தியன் தாட் பப்ளிகேஷன்ஸ், புரொடக்டிவிட்டி பிரெஸ், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் ஆஃப் இந்தியா ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்களை அச்சிட்டிருக்கிறது, சுதர்சன் கிராபிக்ஸ் அச்சகம்.

“ஆப்செட் பிரிண்டிங் மிஷினில் அச்சடிப் பதுன்னா, நிறைய பிரதிகளை அச்சடிச்சாதான் லாபம். பிரதிகளோட எண்ணிக்கை குறைவா இருந்தா சிரமம்தான். அதேசமயம், உடனடியாகப் புத்தகங்கள், அதுவும் குறைந்த எண்ணிக்கையில வேணும்னா அதுக்கு இருக்கவே இருக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம்” என்று சொல்கிறார் சுப்பிரமணியன்.

எனினும் தொழில்நுட்பம் மலிந்த இந்த யுகத்தில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. “இப்போ நிறைய அச்சகங்கள் இருக்கு, நிறைய புத்தகங்கள் அச்சடிக்கப்படுது. ஆனா, புத்தகங்களுக்கான டிமாண்ட் குறைஞ்சிட்டதாத் தோணுது. இது பெரிய சவால்தான். ஏன்னா, ஸ்மார்ட்போன், டேப்லட் யுகத்துல புத்தகம் வாங்கிப் படிக்கணுங்கிற பழக்கம் குறைஞ்சி கிட்டே வருது” என்று வருத்தத்துடன் குறிப்பிடு கிறார். உண்மைதான்! தாள்களின் சுகந்தமான வாசனையுடன் எழுத்தாளர்களின் கற்பனை களையும் கருத்துகளையும் தம்முள் புதைத்து வைத்திருக்கும் புத்தகங்களைக் கைகளில் வைத்துப் படிப்பதில் இருக்கும் இன்பத்துக்கு இணை ஏது?

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x