

பாரீஸ் புறநகர் பகுதி அஞ்சலகம் ஒன்றில் பதுங்கிய ஆயுதமேந்திய தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த 2 பேரை சிறைபிடித்தார். எனினும், அவர் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவரல்ல என்று போலீஸார் தெரிவித்தனர்.
பாரீஸ் நகரின் வடமேற்கே உள்ள கொலம்பஸ் நகரில் இந்த தபால் நிலையம் அமைந்துள்ளது. நேற்று, இங்கு அந்த தீவிரவாதி நுழைந்தார். ஆனால், அங்கு வந்திருந்த பொதுமக்களில் பலர் அவர் பிடியில் சிக்காமல் தப்பிவிட்டனர்.
தெளிவில்லாத வகையில் உளறலாகப் பேசிய அவனிடம் ஏராளமான எறிகுண்டுகளும் கலாஷ்னிகோவ் ரக துப்பாக்கிகளும் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வானில் ஹெலிகாப்டர் மூலமாக கண்காணிக்கப்பட்டது. சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, பேச்சுவார்த்தைக்குப்பிறகு பிணையக் கைதிகளை விடுவித்த அந்த மர்ம நபர் போலீஸாரிடம் சரணடைந்தார்.
பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதையடுத்து பாரீஸில் இத்தகைய சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், சார்லி ஹெப்டோ பத்திரிகை செயல்பாடுகள் மீதும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.