

பூமியைப் போன்ற அளவுள்ள 5 கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரத்தை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரம் இதுவரை கண்டறியப்பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழமையானதாகும்.
நாசாவின் கெப்ளர் செயற்கைக் கோள் மூலம் கண்டறியப்பட்ட அந்த நட்சத்திரத்துக்கு கெப்ளர்-444 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தை, பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவுள்ள 5 கிரகங்கள் சுற்றி வருகின்றன.
சிட்னி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் கல்லூரி பேராசிரியர் டேனியர் ஹூபர் கூறும்போது,” இதுபோன்ற பழமையான நட்சத் திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றிவருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது.
கெப்ளர் 444 சூரியக்குடும்பமானது, நமது சூரியக் குடும்பத்தை விட இரண்டரை மடங்கு பழமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழமையானது” எனத் தெரிவித்தார்.
கெப்ளர்-444 குடும்பத்திலுள்ள கிரகங்கள், தங்களது சூரியனை 10 நாட்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்து விடுகின்றன. அதே போல புவிக்கும் சூரியனுக் கும் இடையே உள்ள தொலைவில் 10-ல் ஒரு பங்கு தொலைவுக்குள் வட்டப்பாதையில் சுற்றிவந்து விடுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியக் குடும்பங்கள் உருவான விதம் குறித்து அறிவதற்கு இக்கண்டுபிடிப்பு மேலும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.