Last Updated : 22 Jan, 2015 04:54 PM

 

Published : 22 Jan 2015 04:54 PM
Last Updated : 22 Jan 2015 04:54 PM

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விளக்கத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி அடுத்த 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அமெரிக்க வாழ் இந்திய சிக்கியர்களின் இயக்கமான சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு இது தொடர்பாக தொடர்ந்துள்ள வழக்கில், "இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பாசிசக் கொள்கைத் திணிப்பில் ஈடுபடுகிறது.

இந்திய நாட்டை இந்து மத நாடாக மாற்ற அந்த இயக்கம் தீவிர ஆர்வத்துடன் வன்முறை மற்றும் மூர்க்கத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் இந்து மதத்தினுடைய கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை ஏற்படுத்த அந்த இயக்கம் வேலை செய்கிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்களை தொடர்ந்து குறிவைத்து வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், பாபர் மசூதி தகர்ப்பு, 1984-ம் ஆண்டு பஞ்சாப் பொற்கோயில் கலவரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்கச் செய்தது, 2008-ல் தேவாலயங்களை எரித்து கிறிஸ்துவப் பெண் துறவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது என தொடர்ந்து பல சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் ஆர்.எஸ்.எஸ். ஈடுப்பட்டு வருகிறது.

தற்போது கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியர்களையும் இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சிகளுக்கு 'The Home Coming' என்ற பெயரை அந்த இயக்கம் சூட்டுகிறது.

இதனால் தீவிர மதத் திணிப்பில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் அதனைச் சார்ந்த கிளை இயக்கங்களையும் அமெரிக்காவில் தீவிரவாத இயக்கமாக அறிவிப்பதோடு அல்லாமல், ஆர்.எஸ்.எஸ்-ஐ சர்வதேச தீவிரவாத இயக்கமாகவும் அறிவிக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x