

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் வீட்டில் விலை விலையுயர்ந்த சொகுசு கார்கள் இருப்பதாக வந்த ரகசிய புகாரைத் தொடர்ந்து, அவரது பண்ணை வீட்டில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச போட்டியிட்டு தோல்வியடைந்தது முதல் அரசியல் ரீதியிலான பின்னடைவுகள் பல அந்நாட்டில் அவருக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தங்காலையில் அமைந்துள்ள ராஜபக்சவின் வீட்டில் விலை உயர்ந்த கார்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு திங்கட்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், இந்தச் சோதனையின்போது ஆடம்பர கார்கள் எதுவும் சிக்கவில்லை என்று இலங்கை போலீஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவின்பேரிலே சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் சோதனையில் எவ்வித முறைகேடான வகையில் பெறப்பட்ட கார்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹனா தெரிவித்தார்.
ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச கூறுகையில், "எங்களது வீட்டில் லாம்போர்கினி கார் இருப்பதாக வந்து சோதனை செய்தனர். எங்கள் வீட்டில் சோதனையிட்டது மட்டுமல்லாமல், எங்களது நண்பர்கள் வீட்டிலும் சோதனை செய்து தொந்தரவு செய்கின்றனர். இதனால் நண்பர்களைக் கூட எங்களால் சந்திக்க முடியவில்லை.
கடற்படை விமானங்களும் பந்தய கார்களின் டயர்களும் இருப்பதாக குற்றம் கூறப்பட்டது. ஆனால், அவர்களுக்கு சிக்கியதெல்லாம் குழந்தைகள் பயன்படுத்தும் மிதி படகு மட்டும் தான்" என்றார் அவர்.