Last Updated : 11 Jan, 2015 12:40 PM

 

Published : 11 Jan 2015 12:40 PM
Last Updated : 11 Jan 2015 12:40 PM

வாகா எல்லையில் 61 பேர் பலியானதற்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை

வாகா எல்லை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை பாகிஸ்தான் போலீஸார் நேற்று சுட்டுக் கொன்றனர். அவருடைய கூட்டாளிகள் 2 பேரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாயினர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் தினமும் காலை, மாலையில் இரு நாட்டுக் கொடிகள் ஏற்றம் இறக்கம் நிகழ்ச்சி நடக்கும். மிகப் பிரபலமான இந்நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நேரங்களில் வாகா எல்லைப் பகுதிகளில் கூடுவார்கள். கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சி முடிந்து சில நிமிடங்களில், பாகிஸ்தான் பகுதிக்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 61 பேர் பலியாயினர். 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்கு தலை, ‘தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்’ தீவிரவாத அமைப்பு நடத்தியது தெரியவந்தது. இந்த சதியில் முக்கிய குற்றவாளியான ரூஹூல்லா (எ) அசத்துல்லா என்ற தீவிரவாதியைப் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் லாகூரில் அசத்துல்லா பதுங்கியுள்ள தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் விரைந்து சென்று அவர் பதுங்கியிருந்த பர்கி சாலை பகுதியை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸார் மீது அசத்துல்லாவும் அவருடைய கூட்டாளிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குப் போலீஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் அரை மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த என்கவுன்ட்டரில் அசத்துல்லா மற்றும் அவருடைய கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய சடலங்களைப் போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், துண்டு பிரசுரங்களை கைப்பற்றினர். சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் பழங்குடியினத்தவர்கள் வாழும் பஜோர் பகுதியைச் சேர்ந்தவர்கள், தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முல்லா பசுலுல்லா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இத்தகவலை அதிகாரிகள் தெரிவித்ததாக ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x