

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாடு முடுக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் லக்கி டார் பகுதியில் ஷியா முஸ்லிம்களின் மசூதியை குறிவைத்து வெள்ளிக்கிழமை தொழுகையின்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் குறைந்தது 61 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் சார்பில் அவரது செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "அனைத்து பிரிவு மதத்தினரின் பாதுகாப்பும் முக்கியமானது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையின மக்களைப் பாதுகாப்பதும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டியதும் அவசியம்" என்றார்.